பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 பார்வையில் இப்பொழுது அடிகளார் காண்கிறார் என்பதையே தெரிவிக்கின்றது. இங்கும் முதலில் இடம் பெறுவது இறைவன் உடலில் புகுந்த சிறப்புத்தான். அதை விடச் சிறப்பு அவன் உளம் பிரியான் என்று பாடியதாகும். இவ்வளவு சிறப்புக்களைச் செய்தவன் யார் எனக் கூற வந்த அடிகளார், வானோர்களும் அறியாதது ஒர் வளம் ஈந்தனன் எனக்கே என்று பாடுகிறார். தமக்குக் கிடைத்த சிறப்பைக் கூறும்போது வானோர்களும் அனுபவியாத என்று கூறாமல், 'வானோர்களும் அறியா’ என்று பாடிய தால், வானவர்கள் இதனை அனுபவியாததுமட்டு மன்று, அதன் சிறப்பை அவர்கள் அறிந்ததுகூட இல்லை என்கிறார். இத்தகைய ஒர் அனுபவத்தைப் பெற்ற பிறகு, களிப்பும், இறுமாப்பும் இயல்பாகவே தோன்றுமன்றோ! 506, 507ஆம் பாடல்களில் மூன்று செய்திகள் பேசப் பெறுகின்றன. அடிகளாரின் வினை குடியிருந்த உள்ளத்தில் அந்த வினைகளை எரித்தது (வினைக்கேடன்) முதற்செய்தி. அவரது உடலிலும் உள்ளத்திலும் அவன் புகுந்தது இரண்டாவது செய்தி. இதனையே மெய் நாள்தொறும் பிரியா வினைக்கேடா (506) என்றும், "ஊனார் உடல் புகுந்தான் உளம் பிரியான் உயிர் கலந்தான் (507) என்றும் பாடுகிறார். மூன்றாவது செய்தியில் ஒரு நிலை விரிவாகவும், ஒரு நிலை குறிப்பாகவும் பேசப்படுகின்றன. விரிவாகப் பேசப் பெற்றது இரண்டாவது நிலை கிடைத்தவுடன் ஏற்பட்ட களிப்பும், இறுமாப்பும் ஆகும். குறிப்பாகப் பேசப்பெற்ற செய்தி, களிப்பும் இறுமாப்பும் இப்பொழுது காணாமல் போய்விட்டமையால், அவற்றை மீட்டுப் பெறுவது எந்நாளோ என்று இரங்கிக் கூறும் நிலையாகும். 509ஆம் பாடலின் இறுதி அடியில் வரும் மனத்தான், கண்ணின் அகத்தான் என்பவை உபசார வழக்கன்று.