பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இதன் எதிராக, நாம் சொந்தமாகப் பேசும் மாற்றம் அல்லது சொல் வேறுபட்டது. நம்முடைய மூளை, அறிவு, மனம் என்பவை தம்முள் ஊடாடித் தோன்றும் ஒர் எண்ணத்திற்கு சொல்வடிவு தர விரும்பும்பொழுது வைகரி பைசயந்தி என்பவற்றின் துணையுடன் நாக்கு முதலியவற்றின் உதவியால் அச்சொல் வடிவு பெறுகிறது. ஒரு சொல் வெளிப்படும்போது இத்துணை நிகழ்ச்சிகள் உள்ளே நடைபெறுவதால், அச்சொல்லை இறைவி வடிவ மாகவே (சக்தி வடிவமாகவே) நம்முன்னோர் கருதினர். பிறர் ஒரு வினாவை எழுப்பியபோது அதற்கு நாம் கூறும் விடையையே மறுமாற்றம்’ என்று சொல்லுகிறோம். இந்த மறுமாற்றம், கேட்கப்பட்ட வினாவின் எல்லைக்குள் அமைவதால் இதில் பணிபுரிவது நம்முடைய அறிவு மட்டுமே ஆகும். எனவே, மாற்றத்திற்குரிய தோற்றப் பெருமை, மேலே கூறப்பெற்ற பல செயற்பாடுகள் மறுமாற்றத்திற்கு இல்லை என்பது தெளிவு. இந்த வேறுபாட்டை நன்கு அறிந்த அடிகளார் வேண்டுமென்றே 'மறுமாற்றத்திடையான்' என்று கூறு கின்றார். மறுமாற்றம் வினாவின் எல்லைக்குள் நிற்பதாலும் மாற்றத்திற்குரிய சிறப்பு அதன்பால் இல்லையென்றாலும் அந்த மறுமாற்றத்திற்கூட இறைவனே உள்ளான் என்று கூறுவதால் மாற்றம்’, 'மறுமாற்றம்’ என்ற இரண்டிலும் அவனே உள்ளான் என்ற நுண்மையான கருத்தைப் பெறவைக்கின்றார். அடிகளார் காலத்திற்கு ஒரு நூற்றாண்டு பிற்பட்டு வந்த கம்பநாடன் இப்பாடலிலுள்ள நுணுக்கத்தை நன்கு அறிந்திருந்தான்போலும். எனவே, அதனை விரிவுபடுத்தி இரணியன் வினாவிற்கு விடைகூறும் பிரகலாதன் கூற்றாக (மறுமாற்றமாக),