பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 வேண்டும் என்றும் கெஞ்சிப் பாடும் அடிகளார், சற்றும் எதிர்பாராதவிதமாக வேண்டேன்’ என்று தொடங்கும் 512 ஆம் பாடலின் நான்காவது அடியில் இனிப் புறம்போகல் ஒட்டேனே' என்று பாடியுள்ளார். தம்முள் வந்த இறைவனை வெளியே போகவிடமாட்டேன் என்று கூறுவதற்கு எல்லையற்ற நெஞ்சத்துணிவு வேண்டும். அனைத்தும் போய்விட்டதே என்று அழுதுபுலம்பும் ஒருவர் திடீரென்று 'புறம்போகல் ஒட்டேன்’ என்று பாடுவது அவருக்கே வியப்பைத் தந்திருக்கவேண்டும். என்றாலும், அச்சொல் தம்முடைய எண்ணத்தின் பிரதிபலிப்பு அன்று என்பதை எளிதில் உணர்கின்றார் அடிகளார். அப்படியானால் இந்தச் சொல்லை வெளிப்படுத்தியவன் தம்முள் புகுந்தவன்தான் என்ற நினைவு வருகின்றது. உட்புகுந்தவன் காரணமில்லாமல் தம் மூலமாக இச்சொல்லை வெளிப்படுத்தியிருக்க மாட்டான். சொல் வெளிவந்துவிட்டது ஆதலின், அதன் காரணத்தைத் தேடிய அடிகளார் விரைவில் கண்டுகொண்டார். உள்ளே புகுந்தவன் மலைபோன்றவன் ஆயினும், அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை என்பதை உணர்ந்துகொண்டார் ஆதலின் இந்த ஒரே கருத்தை வைத்து, ஒவ்வொரு பாடலிலும் 'சிக்கெனப் பிடித்தேன்’ (திருவாச: 536-545) என்ற தொடர் வரும்படியாக அமைத்துப் பிடித்த பத்தாகிய பதிகத்தையே பாடியுள்ளார். - முதலில் வெளிவந்த சொல் போகல் ஒட்டேன் என்பதுதான். உள்ளிருந்து அவன் அனுப்பிய அந்தச் சொல்லைத் திருப்பி நினைக்க நினைக்க, அவருடைய உள்ளத்தில் புதிய தென்பு பிறக்கிறது. அதன் பயனாகவே பிறந்த பிடித்த பத்தில் சிக்கெனப் பிடித்தேன்’ என்று கூறுவதோடு நில்லாமல், எங்கு எழுந்தருளுவது இனியே’ என்றும் பாடுகிறார்.