பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 45! தன் கருவூலத்தைத் திறந்துவிட்டு, அவரவர் வேண்டுமானதை வாரிக்கொண்டு செல்லுங்கள் என்று முரசு அறைவிப்ப துண்டு. இதுவே அக்கதைகளில் சிறப்பான பகுதியாகும். அடிகளார் காலத்திலும் இத்தகைய கதை வழங்கியிருத்தல் வேண்டும். அதிலுள்ள சிறப்பை அறிந்த அடிகளார். அதனையே காலமுண்டாகவே (530) என்ற பாடலில் பயன்படுத்துகிறார். - ‘பாண்டிப்பிரான்’ என்பதால் அவன் அரசன் என்பதைக் குறிப்பிட்டார். தன் அடியவர்க்கு’ என்பதால் அந்நாட்டு மக்கள் என்பதை அறிவித்தார். மூலபண்டாரம்’ என்பதால் பல கிளைக் கருவூலங்களுக்கும் தாயகமாக இருக்கின்ற தலைமைக் கருவூலத்தைக் குறிப்பிட்டார். “வழங்குகிறான்” என்பதால் தாரதம்மியம் பாராது வந்தவர்கள் தேவை என்னவென்பதை ஆராயாமல் அள்ளித் தருகிறான் என்பதைக் குறிப்பிட்டார். அரசன் கருவூலத்திற்கும் பாண்டிப்பிரானின் மூல பண்டாரத்திற்கும் ஒரு வேற்றுமை உண்டு, எவ்வளவு பெரிய அரசனுடைய மிகப் பெரிய கருவூலமாயினும் வழங்கிக்கொண்டேயிருந்தால் சில நாட்களில் அது காலியாகிவிடும். ஆனால், பாண்டிப்பிரானின் மூலபண்டாரம் அள்ளக் குறையாதது; என்றுமே காலியாகாதது. அப்படியானால் எப்பொழுது வேண்டுமானலும், போய் அதனைப் பெற்றுக்கொள்ளலாமே? மானிட மன்னர்களைப் போல் உண்ணும் நேரம், உறங்கும் நேரம், ஒய்வு நேரம், பிற பணியில் ஈடுபட்டிருக்கும் நேரம் இவற்றையெல்லாம் பார்த்து எந்த நேரத்தில் அரசன் வழங்குகின்றான் என்பதைத் தெரிந்துகொண்டல்லவா செல்லவேண்டும்?