பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 கூர்கின்றார். அதுவே சிக்கெனப் பிடித்தேன் என்ற தொடராக வெளிவருகிறது. சிக்கென அதனைப் பற்றிக்கொண்டு அமைதியாக இருந்து, சிந்திக்கத் தொடங்கும்போது, பிறர் கூறியனவும், தாம் இதுவரை நம்பியனவும் ஆகிய சில கருத்துக்கள் அவர் மனத்திரையில் வந்துபோகின்றன. மறுமையில்தான் அவன் திருவடிகளைப் பற்றமுடியும் என்று நினைத்தது தவறு என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த அடிகளார், இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் என்கிறார். இருள் என்பது, அறியாமை, அஞ்ஞானம் என்ற பொருளைத் தரும். இந்த அறியாமையும் அஞ்ஞானமும் நீங்கிய நிலையில்தான் இறைக் காட்சி கிடைக்கும் என்ற பொதுவான கருத்தை மறுப்பவர்போல இருளிடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்’ என்கிறார். அது எவ்வாறு பொருந்துமென்றால் உறுதிப்பாடும் நம்பிக்கையும் அசைக்க முடியாதபடி இருக்கும்பொழுது, அஞ்ஞானமும் அறியாமையும் வேறு முயற்சி இல்லாமலும் தாமே தளர்ந்து வீழ்ந்துவிடும். இக்கருத்தையே இருள் இடத்து(ம்) உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்’ என்கிறார். இருள் இடத்தும் என்பதிலுள்ள உம்மை தொக்கது. எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று கருதி நம்பிக்கை இழந்த நிலையில், இந்த இன்ப அனுபவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டேன் என்ற கருத்தைத்தான் 'எய்ப்பு இடத்து உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்' என்றார்.