பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19. நான் மாடக் கூடல் ஆன படலம்

கடல் வற்றிப் போனாலும் செயல் வற்றாத வருணன் ஒரு கை பார்த்து விடுவது என்று தீர்மானித்து ஏழு மேகங்களையும் அழைத்து "மதுரை அழிந்து போகும் வரை சூழ்ந்து பெய்க" என்று கட்டளை இட்டான். மழை விடாது பெய்து மதுரையை நீர் சூழச்செய்து அவர்கள் வாழ்க்கையைச்சின்ன பின்னப்படுத்தியது. நகர மக்களும் நாட்டு அரசனும் சோமசுந்தரரை அணுகித் தம்மைக் காத்தருளுமாறு வேண்டினர்.

இறைவன் தன் முடி மீது தவழ்ந்து கிடந்த மேகங்கள் நான்கினை விளித்து மறுபடியும் நீர் சென்று நான்கு மாடங்களாக மதுரைக்கு மூடியாக அமைந்து தண்ணீர் கொட்டாதவாறு தடுக்கவேண்டும்" என்றான். நான்கு மேகங்கள் மாடங்களாக அமைந்து அங்கு ஒரு சேரக் கூடியதால் அந்நகருக்கு 'நான் மாடக்கூடல்' என்ற பெயரும் வழங்குவது ஆயிற்று.

மேகங்கள் நான்கைக் கொண்டு மதுரையைக் காத்தான். இடியும் மின்னலும் கொண்டு தாக்கிய போதும் ஒரு சொட்டுத் தண்ணீரும் உள் நுழையாமல் மேகங்கள் பாய் விரித்தது போலப் படிந்து காத்தன. கடல் ஏழும் முழுகி வயிறாரப் பருகி இங்கே வந்து கொட்டிய அவ்வளவு நீரும் மலைக்கற்களில் பெய்த அலைகள் ஆயின. உடற் பருத்துக் கறுத்து வந்த மேகங்கள் எல்லாம் மெலிந்து நலிந்து வெளுத்துவிட்டன. ஆணையை நிறைவேற்ற முடியாமல் புதுமணப் பெண்போல வெட்கித் தலை சாய்ந்து வருணன் முன் நின்றன. விதவைக் கோலத்தில் வந்த மேகங்களைக் கண்டு வருணனும் சினம் அடங்கி-