பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

89


எனவரும் நால்வர் நான்மணிமாலை வெண்பாவாகும். இம்மூன்று பாடல்களானும் அன்பினாற் செறிந்தார் தம் அன்பின்மிகுதி அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கத்தினும் அன்புடைய அடியாரிடத்தும் குருவிடத்தும் செறிந்து விளங்குந் திறம் முறையே கூறப்பட்டது.


55. அன்பேயென் னன்பேயென் றன்பா லழுதரற்றி
அன்பேயன் பாக அறிவழியும்-அன்பன்றித்
தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான்.

இஃது அன்பின் சிறப்பினை விரித்துரைக்கின்றது.

(இ - ள்) அன்புருவாகிய சிவமே! என்னால் அன்பு செய்தற்குரிய பொருளே! என்று இவ்வாறு அன்பினால் அழுது அரற்றி இத்தகைய அன்பே இறைவனையடைதற்குரிய சாதனமாகக் கொண்டு தற்போதம் ஒழிதற்குக் காரணமாகிய அன்பே சிவமாகிய நற்பயனையளிப்பதன்றி அன்பின்றித் தீர்த்தங்களில் நீராடுதல் தியானஞ் செய்தல் சிவனை மலர்தூவி வழிபடுதல் ஆகிய அப்புறச் செய்கைகள் மட்டும் உயர்த்துக் கூறப்படும் வீடுபேறாகிய பயனைத்தரவல்லன அல்ல எ-று.

அன்பாலழுதரற்றி அறிவழியும் அன்பாவது, “இன்பமே என்னுடை அன்பே” எனவும் “அன்பினாலடியேன் ஆவியோடாக்கை யானந்தமாய்க் கசிந்துருக, என்பரமல்லா இன்னருள் தந்தாய் யானிதற் கிலனொர் கைம்மாறு” எனவும் அன்பினால் ஆன்ம போதங்கெட அழுதடியடைந்த அன்பராகிய திருவாதவூரடிகள் இறைவன்பாற் கொண்ட பேரன்பாகும். தீர்த்தம் - கங்கை காவிரி முதலிய தூய நீர்த்துறைகளில் நீராடல். தியானம் - அந்தக்கரணங்களை யொடுக்கி இறைவனைச் சிந்தையில் நினைத்தல். சிவார்ச்சனை - சிவலிங்கம் முதலிய திருமேனிகளை மலர்தூவி வழிபடுதல். பழம் - பயன்; முடிவிலா இன்பமாகிய வீடுபேறு. இவை பழமன்று எனவே அன்பொன்றே அன்பாகிய சிவத்தையடைதற்குச் சிறந்த சாதனமாம் எ - று.

“அன்போடுருகி அகங்குழைவார்க்கன்றி என்பொன்மணியினை எய்தவொண்ணாதே' (திருமந்திரம்) எனவும், “கோடிதீர்த்தங் கலந்து குளித்தவை ஆடினாலும் அரனுக்கன்பில்லையேல்” (திருக்குறுந்தொகை) எனவும் வரும் திருமுறைகள் இங்கு நினைத்தற்குரியன.

"வீடுபேற்றுக்குச் சாதனமாகவும் வீடுபேறாகிய பயனாகவுந் திகழ்வது தூய அன்பொன்றே யென்பதாம். “இதுபற்றியே ‘இறவாத

12