பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

91


உஅ. வித்தினைத் தேடி முளையைக் கைவிட்டவர்
பித்தேறி னார்களென் றுந்தீபற
பெறுவதங் கென்பெணே யுந்தீபற.

இது, பிறப்பிறப்புக்குக் காரணமாகிய பாசவிகற்பங்களைக் களைந்து முத்திக்கு வித்தாகிய மெய்யுணர்வை விரும்பியவர்கள் பெறும் பேற்றின் உறுதிப்பாட்டை அருளிச் செய்கின்றது.

(இ-ள்) முத்திக்கு வித்தாகிய திருவருளைக் குருவருளால் தேடிப் பெற்றுப், பிறப்பிற்குக் காரணமாக முளைக்குந் தன்மையாகிய பாச விகற்பங்களைக் கைவிட்ட நற்பேறுடையவர்கள் சுகதுக்க வாதனைகளைக் கைவிட்டு மேலாகிய ஞானம் பிரகாசிக்கத் தக்க பரமானந்த சொரூபத்திலே புகுந்தவர்கள். இவ்விடத்திலே இவ்வாறு பெறுதற்குரிய பேரின்பப் பேற்றை விட்டுப் பாச விகற்பங்களால் மயக்கமுறும் உலகியலாகிய அவ்விடத்து அவர்கள் பெறுதற்குரிய பேறு யாதுளது? நெஞ்சமே எ - று.

பித்து ஏறினார்-மயக்கமாகிய கடலினின்றும் தெளிவாகி கரையில் ஏறியவர்கள். பெண்ணே அங்குப் பெறுவது என்? என இயைத்துப் பொருள் கொள்க. அங்கு என்றது, பாசவிகற்பங்களாகிய முளையைக் கைவிடாத அவல நிலையினை. -

இனி வித்து என்றது, ஞானத்திற்கு முதலாகிய சிவபரம்பொருளை, முளை என்றது அதன்கணின்று வெளிப்பட்டு விரியும் திருவருள் ஞானத்தையெனக் கொண்டு வெளிப்படவிரிந்த முளைப்பகுதியிலே அதற்குக் காரணமாகிய விதைவெளிப்படக் காணாமை கொண்டு ஞானத்திற்கு முதலாகிய சிவபரம்பொருளின் உண்மையினை யுணரப் பெறாது கைவிடுவாரும், திருவருள் ஞானத்தை ஒருவாறு பெற்றும் தற்போதமற அதனைப் பேணிப் போற்றாதாரும் நற்பேறற்றவர்களே என்பது இத்திருப்பாடலின் பொருளமைப்பாகக் கொள்ளுதற்கும் இடமுண்டு.

அதனில் - அம்முளையிடத்தே. அதனை-அம்மெய்ப்பொருளை. முளையைக் கைவிடலாவது,திருவருளைத் துணையாகப் பற்றாது ஆன்மபோதம் முற்பட நிற்றல்.

வயலில் விதை விதைக்கப்பெற்று முளைதோன்றிய நிலையில் அம்முளையைப் பேணி வளர்ப்பவர்களே உழவின் பயனைப் பெறுவர். அவ்வாறன்றி முளைக்குக் காரணமாகிய விதையைத் தேடிக் காணப் புகுந்து முளையைப் பேணாது கைவிட்டவர்கள் பித்தர்களே. அவர்கள் அங்கு நெல்விளைவாகிய பயனைப் பெறமாட்டார்கள். அதுபோலவே தமக்குத் தவத்தால் விளைந்த சிவஞானமாகிய முளையினைப் பேணி