பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

121


எனவும் “இன்பமே என்னுடை அன்பே” (திருவாசகம்-கோயிற்றிருப் பதிகம்-1} எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் இறைவன் இன்புருவினனாதலை நன்கு புலப்படுத்துதல் காணலாம். “இன்பதனை யெய்துவார்க் கீயும், அவர்க்குருவம் இன்பகனம்” (73) என்பது திருவருட்பயன். பேரின்பமான பிரமக்கிழத்தியோடு ஓரின்பத்துள்ளான் என இறைவனது இயல்புரைப்பதாகிய இத்தொடரினை ஆன்மாவைக் குறித்ததாகக் கொண்டு “பெரிய இன்பமான சிவசக்தியுடனே கூடி ஒப்பற்ற இன்பத்தை யுடையனானாய்” என உரைவரைந்தாருமுளர். “உள்ளான்” என்னும் ஆண்பாற் படர்க்கைச் சொல்லை “உடையனானாய்” என முன்னிலையிடத்ததாக மாற்றியுரைத்தல் சிறிதும் பொருந்தாதென்க. அன்றியும் இத்திருவுந்தியார் தொடர்ப் பொருளை விளக்கும் முறையில் அமைந்துள்ள திருக்களிற்றுப்படியார் பாடற் பொருளோடும் இவ்வுரை முரண்பட்டுள்ளமையும் இங்குச் சிந்தித்தற்குரியதாகும்.


௩௫. பெண்டிர் பிடிபோல வாண்மக்கள் பேய்போலக்
கண்டாரே கண்டாரென் றுந்தீபற
காணாதார் காணாரென் றுந்தீபற.

இஃது ஆன்மா தன் செயலற்று இறைவனது அருளின் வழியடங்கிப் பெறும் இன்பநிலையினை உவமைவாயிலாக அறிவுறுத்துகின்றது. -

(இ-ள்) ஆன்மாவானது பேயாற் பிடியுண்ட பெண்டிர் போலவும், நாயகரான தம்பிரானார் பெண்டிரைப் பிடித்துள்ள பேய்போலவும் தம் செயலற இறைவன் செயலே தம்பால் விளங்க இவ்வாறு தம்மையும் சிவபரம் பொருளையும் உள்ளபடி கண்டு அவனோடு ஒன்றி நின்றவர்களே அம்முதல்வனை உள்ளவாறு கண்டு கூடினவராவர். இங்ஙனம் காணாதார் எக்காலமும் விழியாத கண்ணினராகிய பிறவிக் குருடரை யொப்பர் எ-று.

ஒருத்தியைப் பேய் பிடித்த காலத்து அவளது உடம்பு வேறாகாதிருக்க மனமும் வாக்கும் செயலும் பேயின் வசத்தனவாய் மாற, அவள் தன்னை மறந்து பேயென நின்ற தன்மைபோல, இறைவனது அருள்வழிப்பட்ட ஆன்மாவும் தன்னை மறந்து தன்செயலற்று இறைவன்செயலே தன்பால் விளங்க இறைவனோடு ஒட்டிய பண்பினதாய் நிற்றலும், ஒருத்தியைப் பிடித்த பேயானது, அவளுடைய மன வாக்குச் செயல்களை மாற்றித் தன்னுடைய செயலே அவள்பால் விளங்கத் தானே அவளாய் ஒட்டி வாழ்ந்தாற்போலத் தம்பிரானாராகிய இறைவனும் உடம்போடு கூடிநின்ற உயிருக்குரிய கரணங்கள்

16