பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


வாழ்க்கை யதுபவத்தில் வைத்து வலியுறுத்தும் முறையில் அமைந்தது இத்திருக்களிற்றுப்படியாராகும்.


௪௨. அண்ட முதலா மனைத்தையு முட்கொண்டு
கொண்டத்தைக் கொள்ளாதே யுந்தீபற
குறைவற்ற செல்வமென் றுந்தீபற.

இது குரு அறிவுறுத்திய வண்ணம் குறைவிலா நிறைவாகிய, பூரணப் பொருளோடு ஒன்றி நிற்கும் முறைமையினை உணர்த்துகின்றது.

(இ - ள்) (நிலம் முதல் நாதமீறான தத்துவத்திரட்சியான) அண்ட முதலாகவுள்ள அனைத்துப் பொருள்களையும் தனது விரிவுக்குள் அடக்கிக்கொண்டு எங்கும் நிறைந்துள்ள பூரணப்பொருளாகிய சிவத்தை உனது நெஞ்சத்துட்கொண்டு, இதுகாறும் உன்னைப் பிணித்துக் கொண்டிருந்த பசு பாசவறிவினை நினக்குத் துணையாகக் கொள்ளுதலைத் தவிர்வாயாக. அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்ட குறைவிலா நிறைவாகிய பூரணப் பொருளை அகத்துட் கொண்டிருத்தலே நினக்குக் குறைவற்ற பெருஞ்செல்வமாம் எ~று.

இங்கு "அண்ட முதலாம் அனைத்தையும்’’ என்றது, அண்டம் முதல் அணுவீறாகவுள்ள அனைத்துப் பொருள்களிலும் அதுவதுவாய்க் கலந்து நிற்கும் பரம்பொருளை. அதனை உட்கொள்ளுதலாவது 'பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் படர்ந்ததோர் பேரொளிப்' பரப்பாக அம்முதல்வனது பெரியதிற் பெரிதாந் தன்மையினை இடைவிடாது எண்ணி அம்முதல்வனது விரிவில் தனது உயிருணர்வும் கலந்து விரிதல். 'கொண்டது’ என்றது, ஆன்மாவாகிய தன்னைப் பிணித்துக்கொண்டுள்ள உடல்கருவி உலகு நுகர்பொருள்களாகிய மாயா காரியத்தினை. கொண்டதையெனற்பாலது கொண்டத்தை எனத் திரிந்துநின்றது. கொண்டதைக் கொள்ளாமையாவது, தன்னைப் பிணித்துக்கொண்டுள்ள மாயாகாரியங்களைப் பொருளென்று மதித்து அவற்றின் வழியே செல்லாமை. இங்ஙனம் முதற்பொருளைப் பற்றுதலும் ஏனைய மாயாகாரியங்களைப் பொருளன்றென விட்டொழிதலும் ஆகிய இதுவே உயிர்கள் பெறுதற்குரிய குறைவற்ற செல்வமாம் என்று அறிவுறுத்துவார், “குறைவற்ற செல்வம்” என்றார்.

“அண்டம் என்று சொல்லப்பட்ட சக்கரவாளகிரியும் மகாமேருவும், அண்ட கோளகையும் அட்டகுல பருவதங்களும் திக்கயங்களும் அட்டநாகங்களும் சத்தசமுத்திரங்களும் சத்தமேகங்களும் பதினான்கு புவனங்களும் தேவர் அசுரர் சித்தர் வித்தியாதரர் கின்னரர்