பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


“மீளா ஆளலாற் கைம்மாறில்லை ஐயன் ஐயாறனர்க்கே"
                                                                    {4–40–7)

எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் இங்கு ஒப்புநோக்கத் தக்கனவாகும்.

இத்திருக்களிற்றுப்படியார் பாடற் பொருளை அடியொற்றி யமைந்தது.

"பன்னிறங் காட்டும் படிகம்போல் இந்திரியம்
தன்னிறமே காட்டுந் தகைநினைந்து-பன்னிறத்துப்
பொய்ப்புலனை வேறுணர்ந்து பொய்பொய்யா மெய்கண்டான் மெய்ப்பொருட்குத் தைவமாம் வேறு.

எனவரும் சிவஞானபோத உதாரண வெண்பாவாகும்.

“தன்னாற் சாரப்பட்ட பல நிறங்களின் இயல்பே தன்கண் காட்டி நிற்கும் பளிங்கின் தன்மைபோல, ஆன்மாவும் தன்னாற் சாரப்பட்ட ஐம்பொறிகளின் இயல்பே தன்கண் விளங்க நிற்கும் தனது பொதுவியல்பினை முன்னர்ச் சிந்தித்துணர்ந்துகொண்டு, அந்நிறங்கள் பளிங்கிற்கு வேறென்றுணருமாறு போலப் பலவகையியல்புடைய பொதுவியல்பைச் செய்யும் ஐம்பொறிகளைத் தன்னின் வேறெனத் தெளிந்து அவற்றாலாய பொதுவியல்பு தன்கண் நில்லாது பொய்யாய் ஒழியும்படி தன் சிறப்பியல்பாகிய மெய்ம்மையினைக் குருவினருளால் உணர்ந்தவன், நிலைநில்லாத அசத்துப் பொருளுக்கு வேறாய்த் திரிபின்றி என்றும் உளதாகிய சிவத்தின் இயல்பு தன்கண் விளங்கப் பெற்று அம்மெய்ப்பொருட்கு மீளாவடிமையாவன்” என்பது இதன் பொருளாகும்.


98. இக்கணமே முத்தியினை யெய்திடினும் யானினைந்த
அக்கணமே யானந்தந் தந்திடினும் - நற்கணத்தார்
நாயகற்கும் நாயகிக்கும் நானடிமை யெப்பொழுது
மாயிருத்த லன்றியிலே னியான்.

இது சிவஞானம் பெற்றதனாற் பயன் இறைவனுக்கு மீளாவடிமை செய்தலே என்கின்றது.

(இ-ள்) சைவ சித்தாந்தங்கூறும் முத்தியினை யான் இப்பொழுதே யெய்தப் பெற்றாலும் யான் எண்ணிய அப்பொழுதே இறைவன் விரைந்து பேரின்பத்தைத் தந்தருளினாலும் நல்ல அடியாராகிய திருக்கூட்டத்தார்க்குந் தலைவனாகிய சிவபெருமானுக்கும் அம்முதல்வனோடு பிரிவற விளங்கும் பராசத்திக்கும் நான் எப்பொழுதும் அடிமையாயிருத்தலன்றிச் செய்யத்தகும்பணி வேறொன்றும் இல்லேன் எ-று