பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

33


பவகன்மம் - பிறப்பிற்குக் காரணமாகிய வினைத்தொடர்பு. அதிலே சேர்தலாவது, சிவமாகிய அப்பொருளின் கண்ணே அன்பு செய் தொழுகுதல்.


17. ஆதியை யர்ச்சித்தற் கங்கமு மங்கங்கே
தீதில் திறம்பலவுஞ் செய்வனவும் - வேதியனே
நல்வினையா மென்றே நமக்குமெளி தானவற்றை
மெல்வினையே யென்றதுநாம் வேறு.


இது சிவதன்ம வகையிரண்டனுள் ஒன்றாகிய மெல்வினையின் இயல்புணர்த்துகின்றது.

(இ- ள்) வேதங்களைப் பயின்ற மாணவனே ஆகமங்களில் விதித்த வண்ணம் இறைவனை அருச்சித்து வழிபாடு செய்தற்குரிய உறுப்புக்களும் அவற்றைக்கொண்டு தீமையை ஒழிக்கும் பஞ்சசுத்தி முதலிய கூறுபாடுகளும் அவ்விடத்துச் செய்தற்குரிய கிரியைகளும் நல்வினையாம் ஆதலால் நம்போன்றவர்களும் எளிதிற்செய்தற்குரிய அந்நல்வினைகளை மெல்வினையாம் என்று நாம் வேறாக வைத்துக்கூறியது, எ-று.

ஆதி - இறைவன். அருச்சித்தற்கு அங்கமாவன பூசைக்குரிய பூவும் நீரும் முதலாயின. தீது இல் திறம் - தீமையை இல்லையாக்கும் கூறுபாடு. செய்வன - செய்தற்குரிய கிரியைகள். அரிய செயல்களைச் செய்யும் ஆற்றலில்லா நம்மைப் போன்றவர்களாலும் எளிதில் மேற் கொண்டுசெய்தற்குரிய நல்வினைகளே மெல்வினை என நம்மால் வேறு வைத்துரைக்கப் பெற்றது என்பார் ‘நமக்கும் எளிதானவற்றை நாம் வேறு மெல்வினையே என்றது’ என்றார். ‘வேதியனே’ என்பதற்கு ‘சித்து அசித்துக்களோடு கலந்திருக்கின்றவனே’ என உரைவரைந்தார் பழையவுரையாசிரியர்,

“சரியை கிரியைகளிலே நின்று வழிபடுகிற அளவில் கொலை களவு கள் காமம் பொய் என்ற ஐந்தையும் விட்டு நிற்கையாலும், மன வாக்குக் காயங்களால் நினைப்பன சொல்வன செய்வன வெல்லாம் தெய்வகிருத்தியத்தினாலே யாகையாலும், அசுத்தத்திலே நின்றும் நீங்கிச் சுத்தனாய் நிற்கையாலும், சர்வான்மாக்களையுந் தன்னைப்போற் காண்கையாலும், வேதாகமங்களின் முறைமைகளிலே வழுவாமல் நிற்கையாலும் ஆசாரியனாலே வேதியனே என்றழைக்கப்பட்டது” என விளக்கந்தருவர் தில்லைச் சிவப்பிரகாசர். திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனர் தம்மாணவனை வேதியனே என்றழைத்திருத்தலால் தில்லையில் தலவாசம் பண்ணிக்கொண்டிருந்த அம்மாணவர் பிறப்பால் வேதியராக விருத்தலுங்கூடும்.

§