பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

71


தற்குச் சொல்லப்பட்ட தொருதுணையாகும். இதுவுமன்றி வாக்கால் உரைக்கப்படாத தூய நெறியாகிய வீட்டுநெறிக்கண்ணே சென்று பொருந்துதற்குச் சிறந்த துணையுமாகும், எ - று.

ஆம்பொழுதிலே செத்தாற்போல் அடைய ஆசை அறின், சாம் பொழுதும் ஏதும் சலமில்லை. [இந்நிலை] சோம்புதற்குச் சொல்லுந் துணையாகும். சொல்லாத தூய்நெறிக்கண் சென்று செல்லுந்துணையாகும்- என இயையும்.

சோம்பு-ஆன்மா தன் பணி நீத்து இறைவன் அருள்வழியடங்கி யிருத்தல். “சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே” (128) என்பது திருமந்திரம். தூய்நெறி என்றது, யான் எனது என்னும் இருவகைப் பற்றும் நீங்க அவா என்னும் மாசு நீங்குதலால் தூய்மையுடைய துறவாகிய வீட்டுநெறியினை. “துறந்தார்தம் தூநெறி” என்பர் ஆளுடைய அரசர். தூய்மை என்பது அவாவின்மையை. இத்தகைய அவாவறுத்தல் மெய்ப்பொருளாகிய இறைவனை இடைவிடாது சிந்தித்தலாலேயே பெறத்தக்கது என்பார்,

தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும் (364)

என்றார் தெய்வப்புலவர்.


40. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை யென்றமையால்
வேண்டினஃ தொன்றுமே வேண்டுவது - வேண்டினது
வேண்டாமை வேண்டவரு மென்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால்.

இஃது அவாவறுத்தற்கும் இறைவனது திருவருளே துணைபுரிதல் வேண்டும் என்கின்றது.

(இ~ள்) வேண்டுவார் வேண்டுவதே யீந்தருளும் இறைவன்பால் ஒன்றை விரும்பி வேண்டுங்கால் பிறவாமையாகிய பேறொன்றுமே விரும்பி வேண்டத் தகுவதாகும் எனத் தெய்வப் புலவர் அறிவுறுத்தினமையால் பிறவாமையாகிய அஃதொன்றுமே வேண்டிப் பெறுதற்குரியதாகும். பிறவாமையாகிய அப்பேறுதானும் உலகப்பொருளில் வைத்த அவாவையறுத்தலாகிய வேண்டாமையினை வேண்டத் தானேவரும் எனவரும் திருவள்ளுவர் வாய்மொழியினால் யாவரும் விரும்பி வேண்டத்தக்க முதல்வன்பால் பிறவாமைக்குக் காரணமாகிய அவாவறுத்தல் ஒன்றுமே விரும்பி வேண்டத் தகுவதாம் எ-று.