பக்கம்:திரு. வி. க.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 இ. அ.ச. ஞானசம்பந்தன்

இந்த முறையில் அசோகன் வரலாற்றில் காணப்பெறும் சிறப்பான உண்மைகளை எடுத்துக்காட்டிய பிறகு வைதிக சமயத்திற்கும் பெளத்த சமயத்திற்கும் உள்ள தொடர்பையும், அச் சமயம் பரவிய சிறப்பையும், அசோகன் வெற்றிகள் என்று கூறப்பெறுவனவற்றையும் தமக்கே உரிய முறையில் இதோ பேசுகிறார்:

“அசோகர் எதையும் வலியுறுத்தலால் நிகழ்த்துவ தில்லை; அன்பால்-அறவுரையால் நிகழ்த்துவர். அவரிடம் அஹிம்ஸ்ை மனமொழிமெய்களில் வளர்ந்தது என்று சுருங்கச் சொல்லலாம்.

அந் நாளில் பொருளற்ற கிரியைகள் பல ஆக்கம் பெற்றிருந்தன. கிரியைகளுக்கு அடிமைப்பட்ட மக்கள் மனம் தர்ம பிரசாரத்தால் மாறுதல் அடைந்தது. கிரியைகளைவிட அறவொழுக்கமே விழுமியது என்னுங் கொள்கை மக்களிடைப் பரவலாயிற்று.

தமது நாடு பெற்ற இன்பத்தை மற்ற நாடுகளும் பெறுதல் வேண்டுமென்றெண்ணி, அசோகர் தர்ம பிரசாரத்துக்கென்று. அறவோரைப் பல நாடுகளுக் கனுப்பினர். இலங்கை, பர்மா, சீனம், எகிப்து, சிரியா, மாளிடோனியா முதலிய இடங்களில் அறவோர் வாயிலாகத் தர்மம் பரவலாயிற்று.

தர்மப் பிரசாரம் எங்கெங்கே சென்றதோ அங்கங்கெல்லாம் அதற்கு வரவேற்பு நடந்தது. தர்மம் எங்கெங்கே பரவிற்றோ அங்கங்கெல்லாம் அசோக ராஜ்யமும் பரவியதாகக் கொள்க. அசோகர் ஆட்சிக்கு எங்கும் எதிர்ப்பு நேரவில்லை. கொள்கைக்கு எதிர்ப்பி ருக்கும்; கொலைக்கு எதிர்ப்பிருக்கும்; தர்மத்துக்கு எதிர்ப்பிருக்குமோ?

பழம் பாரத தர்மத்துக்கு அசோகர் ஆட்சி ஓர் எடுத்துக்காட்டு.”*

இந்தியாவும் விடுதலையும், பக்கம் 59, 60.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/142&oldid=695431" இலிருந்து மீள்விக்கப்பட்டது