பக்கம்:திரையுலகில் விந்தன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* திரையுலகில் விந்தன் 37

இப்படித்தான் விந்தன் கல்கிக்கு அறிமுகமானார். கல்கி பத்திரிகையில் ஆரம்பத்தில் விந்தன் 'பாப்பா மலர் பகுதிக்குச் சின்னஞ்சிறு கதைகளை வி.ஜி.என்ற பெயரில் எழுதினார். வி.ஜி.என்ற பெயரை விந்தன் என்று மாற்றியதோடு அவரைக் கல்கி ஆசிரியர் குழுவில் இணைத்துக் கொண்டு, விந்தனின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தார் கல்கி கிருஷ்ணமூர்த்தி.

1946இல் ஆரம்பிக்கப்பட்டது தமிழ் வளர்ச்சிக் கழகம். அதே ஆண்டில் வெளிவந்தது விந்தனின் 'முல்லைக் கொடியாள் என்னும் சிறுகதைத் தொகுப்பு. தமிழ் வளர்ச்சிக் கழகம் அளிக்க முன் வந்த முதல் பரிசை விந்தனின் முல்லைக் கொடியாள் சிறு கதைக்கே வழங்கியது. இதன்மூலம் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முதல் பரிசைப் பெற்ற முதல் எழுத்தாளர் விந்தன் அவர்களே யாவார்.

விந்தனின் 'முல்லைக் கொடியாள் என்னும் சிறுகதைத் தொகுப்பிற்குப் பேராசிரியர் கல்கி எழுதிய முன்னுரை, விந்தனுக்கு இலக்கிய உலகில் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகும். இதுதான் முன்னுரை :

‘ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் சிறிய கதைகளும் பெரிய கதைகளும் பெரும்பாலும் ஒரு சாதியாரைப் பற்றியே வந்து கொண்டிருந்தன. எழுதுகிறவர்களும் படிக்கிறவர்களும் பெரும்பாலும் பிராமணர்களா யிருந்தபடியால் அந்தச் சாதியரைப் பற்றியே கதைகளும் எழுதப்பட்டன.