பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

எனவரும் சேக்கிழார் நாயனார் வாய் மொழியால் நன்கு புலனாகும். இவ்வாறு எல்லாம் வல்ல இறைவன் தன்னை அன்பினால் வழிபடும் அடியார்கள் எல்லோர்க்கும் அவரவர் நினைந்த உருவில் தோன்றி அருளும் எல்லாத் திருவுருவங்களுக்கும் மூலமாய்த் திகழ்வது சிவலிங்கத் திருமேனியேயாதலால், ஒங்வொரு திருக்கோயிவிலும் சிவலிங்கத்திருவுருவம் அமைந்த கருவறை மூலஸ்தானம் என வழங்கப்பெறுவதாயிற்று. மூலஸ்தானம். என்னும் வடசொற்றொடர் தமிழொலிக்கேற்ப, மூலட்டானம் எனத் திரிந்து திரு என்னும் அடைமொழி பெற்றுத் திருமூலட்டானம் என வழங்கப்பெறுவதாயிற்று. திருமுறை ஆசிரியர்களால் பரவிப் போற்றப் பெற்று எல்லாத் திருத்தலங்களிலும் இறைவன் அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கத் திருவுருடேனேயே எழுந்தருளியிருக்கக் காண்கின்றோம் ஆயினும் தில்லைவனமாகிய பெரும்பற்றப்புலியூரிலும் திருவாரூரிலும் உள்ள சிவலிங்கப் பெருமான் சந்நிதிகள் இரண்டினை மட்டும் திருமூலட்டானம் என்றபெயரால் வழங்கி வருகின்றோம்.

"பெரும்பற்றப்புலியூர் திருமூலட்டானத்தார்” எனவும்,

"திருவாரூரில் திருமூலட்டானத்தெஞ் செல்வன் தானே" (6-30-1-10)

எனவும் திருநாவுக்கரசர் சிறப்பித்துப் போற்றியுள்ளமையால் இவ்வழக்கின் தொன்மை புலனாகும்.

சிவத்தலங்கள் எல்லாவற்றிலும் தாவரம் (நிலைத்த திருவுருவம்) ஆகச் சிவலிங்கமும், திருவீதிக்கு எழுந்தருளும் திருமேனியாகச் சோமாஸ்கந்தர் சந்திரசேகரர் முதலிய திருவுருவங்களும் வழிபாடு செய்யப்பெற்று வருவதனைக் காண்கின்றோம். இங்குக் கூறப்பெற்ற எழுந்தருளும் திருமேனிகள் அனைத்தும் தாவரம் என மேற்சொல்லப்பட்ட சிவலிங்கத் திருமேனியின் திருவுலாத் திருவுருவங்களாகவே அடங்குவன. தில்லைப் பொன்னம்பலத்தில் எழுந்தருளியுள்ள, கூத்தப் பெருமான் திருமேனியும் திருவாரூர்த் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள தியாகராசப் பெருமான் திருமேனியும் அங்குள்ள சிவலிங்கத்