பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

திருமேனியையொத்து மூலட்டான அமைப்பில் அமைந்தனவாகவே போற்றப்பெறுவனவாகும். சைவ, சமய ஆசிரியர்கள் நால்வரும் தில்லைத் திருமூலட்டானப் பெருமானைப் போற்றிப் பரவும் முறையில் தில்லைச் சிற்றம்பலப் பெருமான் முன்னே நின்று செந்தமிழ்ப்பனுவல்களால் பரவிப் போற்றியுள்ளார்கள். "சிற்றம்பலமேய முற்றாவெண்டிங்கள் முதல்வன் பாதமே, பற்றா நின்றாரைப் பற்றா பாவமே” எனத் திருஞானசம்பந்தரும்,

"குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே" (4-81-4)


எனத் திருநாவுக்கரசரும், "புலியூர்ச்சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாமன்றே" எனச் சுந்தரரும் 'தென்பாலு கந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்' என மணிவாசகப் பெருமானும், தில்லைச் சிற்றம்பவத்தில் ஆடல்புரியும் அம்பலவாணர் திருவுருவத்தினையே சிறப்பாகப் பாடிப் போற்றியுள்ளமை காணலாம். இவ்வாறே, திருவாரூரில் திருமூலட்டானத்தில் எழுந்தருளிய புற்றிடங்கொண்ட பெருமானைப் பரவிப்போற்றிய சுந்தரர், "வீதிவிடங்கப் பெருமான் முன்பு சென்று தொழுது துதித்து வாழ்ந்து திருமாளிகை வலம் செய்து போந்தார்" (பெரிய தடுத்தாட்-129) எனச் சேக்கிழாரடிகள் கூறுவதாலும், திருநாவுக்கரசர் அருளிய 'முத்து விதானம் மணிப் பொற் கவரி' எனத்தொடங்கும் திரு ஆதிரைத் திருப்பதிகத்தில் வீதி விடங்கப் பெருமானாகிய தியாகராசப்பெருமான் அடியார் புடைசூழத் திருவீதிக்கெழுந்தருளும் திருவுலாக்காட்சியைப் பரவிப் போற்றியிருத்தலாலும், திருவாரூரில் புற்றிடங்கொண்ட பெருமான் எழுந்தருளிய திருமூலட்டானம் என்னும் சந்நிதியைப் போலவே தியாகராசப் பெருமான் எழுந்தருளிய சந்நிதியும் முதன்மையுடையதாகப் போற்றப் பெற்று வந்தமை புலனாகும். ஆசுவே தில்லை, திருவாரூர் ஆகிய இவ்விரு தலங்களிலுமுள்ள சிறப்புடைய சந்நிதிகளாகவுள்ள இவற்றைக் குறிப்பிற் புலப்படுத்தும் வகையில் இங்குள்ள மூலத்தானமுடையார் சந்நிதி