பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

பிணத்தை எடுத்துக்கொண்டு போனால், அதற்கு அவர்கள் ஒரு பணம் வரி செலுத்திவிட்டே போகவேண்டுமென்பது திவானுடைய கண்டிப்பான உத்தரவு. கொடாவிட்டால், பிணத்தை விட எங்களுக்கு அதிகாரமில்லை. இது அநாதைப் பிணமென்று நீங்கள் மூங்கில் கயிறு முதலிய சாமான்களைச் சேகரித்தது போல, மகா ராஜனுக்குக் சேரவேண்டிய வரிக்கு ஒரு பணத்தையும் சேகரித்துக் கொண்டல்லவா பிணத்தை எடுத்துக்கொண்டு வரவேண்டும். நீங்கள் இப்போது சொல்வதைக் கேட்டு நாங்கள் உங்களை இன்று விட்டு விட்டால். இன்னும் மற்றவர்களும் இதுபோலவே பலசாக்குப் போக்குகளைச் சொல்லிக்கொண்டே வந்து வரிகொடாமல் ஏமாற்றப் பார்ப்பார்கள். அந்தத் தொந்தரவெல்லாம் எங்களுக்கு எதற்கு? நீங்கள் பணம் கொடுத்தால் விடுகிறோம்; இல்லா விட்டால் விடமாட்டோம்." என்றான்.

பிணத்தைத் தூக்கிக்கொண்டிருந்தவர்களுள் ஒருவன், "சரி, நமக்கேன் இந்தத் துன்பம். இந்தப் பிணம் புதைபட்டால் என்ன; நடுச்சந்தியில் கிடந்து நாறினால் நமக்கென்ன? நாம் மறுபடி இந்தப் பிணத்தை ஊருக்குள் கொண்டுபோனால், ஜனங்கள் நம்மை அடிக்க வருவார்கள். அதுவுமன்றி இதை இவ்வளவு தூரம் தூக்கிக் கொண்டு வந்ததற்கு வட்டியாக நாம் மறுபடி இதைச் சுமந்து கொண்டு போகும் தொல்லை நமக்கேன் பிணத்தை இப்படியே சுங்கன் சாவடிக்கெதிரில் போட்டுவிட்டுப் போய் விடுவோம். இவர்கள் எப்படியாவது செய்து கொள்ளட்டும்" என்று கூறிப் பிணத்தைக் கீழே வைக்க எத்தனித்தான்.

உடனே சேவர்களிருவரும் மிகுந்த கோபங்கொண்டு அவர்களை முன்னிலும் அதிக மூர்க்கமாக அதட்டி, "அடே இங்கே வைப்பீர்களானால், கண்ணைப் பிடுங்கிவிடுவோம். இங்கே நாற்றமெடுத்தால், நாங்கள் இருந்து சுங்கன் வசூலிக்க முடியாமல் போகிவிடும். மகாராஜனுக்கு அதனால் ஏராளமான வரி நஷ்டமாய் விடும். அதற்கு நீங்களே உத்தரவாதி யாவீர்கள். உங்கள் அடையாளம் எங்களுக்கு நன்றாய்த் தெரியும்; நாங்கள் உங்களை இலேசில் விடமோட்டோம். நீங்கள் திவானுடைய கொடிய ஆக் , கினைக்கு ஆளாவீர்கள் ஜாக்கிரதை!" என்றார்கள்.

51