பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

நோக்கி, "ஐயா திவானே! நம்முடைய ராஜ்ஜியத்தில் வரிகள் விதிக்கப்பட்டிருக்கும் விஷயத்தில் எனக்கு முக்கியமான இரண்டு மூன்று சந்தேகங்கள் தோன்றி இருக்கின்றன. அவைகளை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று உங்களை வரவழைத்தேன். அதாவது, நம்முடைய நகரத்தில் இறந்து போகிறவர்களுக்கு வரி விதிக்கப்பட்டிருக்கிறதே, அது என்ன கருத்தோடு விதிக்கப்படுகிறது? ஒரு மனிதர் இந்த நகரத்தில் உயிரோடிருந்தால், அவருக்கு நம்மால் செய்து கொடுக்கப்படும் பாதுகாப்பு, பலவகைப்பட்ட செளகரியங்கள் முதலியவைகளைக் கருதி அவரிடம் நாம் வரிகள் வசூலிப்பது நியாயமே. அவருடைய உயிர் இந்த நகரத்தை விட்டும், இந்த உலகத்தையே விட்டும் போன பிறகு, அவரிடம் எந்த உத்தேசத்தோடு வரி வசூலிக்கப் படுகிறது? வரி மனிதருடைய உயிரைப் பொருத்ததா? அல்லது, அவருடைய உடம்பைப் பொருத்தா? இதுதான் என்னுடைய முதல் சந்தேகம். இறந்து போனவர் அநாதையாகவும், சொத்து என்பதே இல்லாதவராகவும் இருந்தால், அந்த வரியை யார் செலுத்துகிறது என்பதைப் பற்றியாவது அல்லது, அவருக்காக ஏற்படுத்தப்பட்ட வரியைத் தள்ளுபடி செய்து விட வேண்டும் என்பதைப் பற்றி யாவது, உங்களால் ஏதாவது உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருக்கிறா?” என்றான்.

அதைக் கேட்ட திவான் திடுக்கிட்டு மிகுந்த வியப்பும் பிரமிப்பும் அடைந்து, "மகாராஜா! உயிரோடிருக்கும் மனிதருக்கு வரி விதிக்கிறதென்று நான் இது வரையில் தெரிந்துகொண்டிருக்கிறேனேயன்றி இறந்து போனவருக்கு யாரும் வரி விதித்ததாக நான் கேள்வியுற்றதே இல்லை. ஒரு வர்த்தகருக்கு நாம் வரி விதிப்பதாக வைத்துக்கொள்வோம். நம்முடைய உத்தரவு அவரிடம் போய்ச் சேருமுன் அவர் இறந்துபோகிறதாகவும், அந்த வர்த்தகத்தை அவருடைய பிள்ளை நடத்துகிறதாகவும் வைத்துக் கொள்வோம். அந்த உதாரணத்திலும், வரி விதிப்பது ஒரு தொடர்ச்சியான வர்த்தகத்தைப் பொருத்ததேயன்றி, மனிதனைப் பொருத்த தல்ல. ஒரு மனிதன் இறந்தபின், இவன் இறந்ததற்காக இந்த உலகத்தில் எந்ததேசத்தாரும் வரி விதித்ததாகவோ, அல்லது, விதிக்கிறதாகவோ நான் கேள்வியுற்றதே இல்லை. நம்முடைய நகரத்தில் அப்படிப்பட்ட வரியே கிடையாது” என்றார்.

57