உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

இதுபோது தன் பண்டைச் சிறப்பனைத்தும் இழந்து திருப் பனந்தாளுக்கு வடக்கில் கொள்ளிடத்திற்குக் கட்டப்பெற்றுள்ள லோயர் அணையிலிருந்து அரியலூர்க்குச் செல்லும் பெருவழியில் ஒரு சிற்றூராக உள்ளது. ஆயினும் இவ்வூரின் பழைய நிலையை நினைவு கூர்தற்கும் சோழச்சக்கரவர்த்திகளின் பெருமையை யுணர்தற்கும் ஏதுவாக இன்றும் அங்கு நிலைபெற்றிருப்பது கங்கைகொண்ட சோழேச்சுரம் என்னும் சிவாலயமேயாகும். இந்நகரில் நம் குலோத்துங்கனுக்குப் பின்னர் வீற்றிருந்து ஆட்சி புரிந்தோர் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் என்போர். இவர்கள் எல்லோரும் புகழாலும் வீரத்தாலும் நம் குலோத்துங்கனது பெருமையைப் பின் பற்றியவர்கள் என்று ஐயமின்றிக் கூறலாம். சோழமன்னர்களுள் இறுதியானவன் மேற்கூறிய மூன்றாம் இராசேந்திரனே ஆவன். அவனுக்குப் பின்னர், சோழநாடு பாண்டியரது ஆட்சிக்குள்ளாயிற்று. சோழர் களும் பாண்டியர்க்குத் திறைசெலுத்தும் குறுநில மன்னர் களாயினர். இவர்களது தலைநகராகிய கங்கைகொண்ட சோழ புரமும் பகையரசர்களால் முற்றிலும் அழிக்கப் பெற்றுச் சிறுமை எய்திற்று. படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வந்த தமிழ் வேந்தர்களான சோழர்கள் தங்கள் ஆட்சியும் வீரமும் இழந்து தாழ்வுற்றனரெனினும் அவர்களது ஆதரவினால் வெளிவந்த தமிழ் நூல்களும், அவர்களால் எடுப்பிக்கப்பெற்ற திருக்கோயில் களும், வெட்டப்பெற்ற பேராறுகளும், கட்டப் பெற்ற அணைகளும் இன்றும் நிலைபேறுடையனவாய் அன்னோரது பெருமையனைத்தும் நம்மனோர்க்குணர்த்தும் கலங்கரை விளக்கமென நின்று நிலவுதல் ஒருவகையால் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் என்பது திண்ணம்.

முற்றும்