உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருப்புறம்பயத் தல வரலாறு

97

ஆதரிக்கப் பெற்றவர் ஆவார். மேற்குறித்தவர்களைத் தவிர பல அறிஞர்களும் அண்மைக் காலத்தில் இவ்வூரில் வாழ்ந்துள்ளனர் தெற்குவீதி, வடக்குவீதி ஆகியவற்றை இணைக்கும் சந்து சென்ற நூற்றாண்டு வரை இராமப்பையன் அக்கிரகாரம் என்று வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இராமப்பையர் என்பவர் தஞ்சை மராட்டிய மன்னர்கள் காலத்தில் வாழ்ந்த ஓர் உயர்நிலை அலுவலராக இருக்கலாம்.

திருவிழாக்கள்

ஆண்டு தோறும் மாசி மாதத்தில் பத்து நாட்கள் பிரமோற் சவம் நடைபெறுகின்றது, இதுவே இக்கோயில் திருவிழாக்களுள் பெரியது, ஐந்தாம் நாள் தன்னைத்தான் அருச்சிக்கும் சிறப்பும், ஏழாம்நாள் திருக்கலியாணமும், எட்டாம் நாள் சந்திர சேகரர் விழாவும், ஒன்பதாம் நாள் திருத்தேர்விழாவும், பத்தாம்நாள் மகத்தில் இறைவன் இடபாரூடராய் பரிவார தேவர்களோடு பிரமதீர்த்தத்திற்கு எழுந்தருளித் தீர்த்தம் வழங்கியருளும் காட்சியும் நிகழ்ந்து வருகின்றன.

இக்கோயிலுக்குரிய தேர் பழுதுற்றமையால் திருப்பனந்தாள் மடத்தின் தலைவர்ஆக இருந்த ஸ்ரீசாமிநாத தம்பிரான் சுவாமிகள் அளித்த தேரில்தான் இறைவன் பிரமோற்சவத்தின் ஒன்பதாம் நாளில் எழுந்தருளிக் காட்சியளித்து வருகின்றனர். அன்றியும், அவர்கள் கைலாய வாகனம் ஒன்றும், பல்லக்கு ஒன்றும், யாளி வாகனம் ஒன்றும், இக்கோயிலுக்கு வழங்கியுள்ளனர்.

ஆவணி மாதத்தில் பிரளயங் காத்த விநாயகருக்கு ஐந்து நாள் விழா சில அன்பர்கள் துணைகொண்டு தொடங்கி முன்போல் நடைபெற்று வருகிறது. இப்பிள்ளையார்க்கு ஆவணிச் சதுர்த்தியில், ஆண்டு தோறும் ஓர் ஆடம் தேன் அபிஷேகம் செய்யப் பட்டு வருக்கின்றது. இது தொன்றுதொட்டு நடை பெற்றுவரும் சிறப்புடைய விழாவாகும். மற்ற மாதங்களிலும் சிவாலயங்களில் நிகழ வேண்டிய விழாக்களும் குறைவின்றி நடைபெற்று வருகின்றன. நாள் தோறும் நான்கு கால வழிபாடுகள் செய்யப்படுகின்றன.