உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திருப்புறம்பயத் தல வரலாறு

105

உணர்த்து கின்றது. ஒன்பதாம் திருமுறையிலுள்ள ஒரு பதிகம் பாடிய முதற் கண்டராதித்த சோழன் மனைவியார் செம்பியன் மாதேவியார், தம் புதல்வன் உத்தம சோழன் நலன் குறித்துப் புறம்பயமுடைய பெருமானுக்குத் திருமஞ்சன நீராடியருள வெள்ளிக்கலசம் ஒன்று அளித்துள்ளனர் என்பது ஒரு கல்வெட்டால் தெரிகிறது. இரண்டாம் பராந்தக சோழன் முதல் மகன் ஆதித்த கரிகாலன் ஆட்சிக் காலத்தில் இருந்த இருமடி சோழப் பெரும்படையினர் திருப்புறம்பயத்தில் நந்தவனம் ஒன்று அமைத்து அதனைப் பாதுகாத்தற்கு ஆறுமா நிலம் இறையிலியாக விட்டனர் என்பதை ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது. முதல் இராஜராஜ சோழன் அதிகாரிகளில் ஒருவனாகிய வானவன் மூவேந்த வேளான் என்பான், திருக்கோயிலில் அஷ்டபரிவார தெய்வங்களை எழுந்தருளுவித்து அவற்றிற்கு நாள் வழிபாட்டிற்கு நிபந்தங்களும் விட்டான் என்பது ஒரு கல்வெட்டால் அறியப் படுகிறது. எனவே, கி.பி.985 முதல் கி.பி. 1014 வரையில் நடைபெற்ற முதல் இராஜஇராஜ சோழன் ஆட்சியில் தான் அம்பிகைக்குத் தனிக்கோயில் அமைக்கப்பெற்றது என்பது வெளியாகின்றது. இந்த வானவன் மூவேந்த வேளான், புறம் பயத்திறைவனிடத்தில் அளவற்ற பக்தியுடையவனாக விருந்தனன் என்பது தெரிகிறது. இவன் 150 கழஞ்சில் மூன்று பொற்பட்டமும், 5 கழஞ்சில் பொற்பூவும், 8 கழஞ்சில் வெள்ளி வட்டிலும், செய்து அப்பெருமானுக்கு அளித்த செய்தி ஒரு கல்வெட்டால் புலனாகின்றது. முதல் இராஜராஜ சோழன் காலத்தில், ஒரு தலைவனால் ஸ்ரீ பலிக்குப் பொன் வட்டில் செய்தளிக்கப்பட்டுள்ளது. இராஜ ராஜ சோழன் பணிமகன் குவலய சுந்தரன் என்பவனால், நாள்தோறும் இறைவனுக்குத் தும்பைப்பூ சாத்துவதற்கு நிபந்தமாகப் பொன் கொடுக்கப் பட்டுள்து.

முதற் குலோத்துங்க சோழன் ஆட்சியின் 43ஆம் ஆண்டில் கி.பி. 1113ல் பங்குனித் திருநாளுக்கும், திரு வேட்டைக்கும், நிபந்தமாகத் திருவெள்ளறை நல்லூரில் அரசனால் நிலம் விடப்பட்டிருக்கிறது. அரிவாள் தாயன், சிறுத்தொண்டன், வன்றொண்டன், சண்டேசுவரன், இயற்பகை, கோட்புலி,