உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

123

முகவுரை

பண்டைக்காலத்தில் நம் தமிழ் நாட்டை ஆட்சிபுரிந்த தமிழ் வேந்தர் மூவருள் சோழமண்டலத்தைச் சிறப்பாக அரசாண்டவர்கள் சோழ மன்னர்கள் என்பது யாவரும் அறிந்ததே. அப்பெரு வேந்தர்கள் கடைச்சங்க காலத்தில் (ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்) தம் தலைநகர் களாகக் கொண்டு வீற்றிருந்து செங்கோல் செலுத்திய திருவுடை நகரங்கள் உறையூரும் பூம்புகார் எனப்படும் காவிரிபூம்பட்டினமு மேயாம். அவற்றுள், உள்நாட்டுத் தலைநகராகிய உறையூரைக் காட்டிலும் பல்வகையாலும் சிறப்புற்று விளங்கியது கடற்கரைத் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினம் என்பது அறிஞர் பலரும் ஆராய்ந்துணர்ந்த முடிபாகும். இக்காலத்திலுள்ள பம்பாய், கல்கத்தா, சென்னை முதலான பெரு நகரங்களைப்போல முற்காலத்தில் நிலவிய இம்மாநகர், காலச் சக்கரத்தின் சுழற்சி யினால் சிதைந்து போய். கடலில் ஒரு பகுதியாகவும் பல சிற்றூர் களாகவும் இப்போது காட்சி அளிக்கின்றது. எனினும், அவ்விடங் களில் இதன் பழைய வரலாறுகளை யுணர்த்தும் சின்னங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. அன்றியும் சங்க நூல்களாலும் இதன் ஒப்பற்ற பழைய நிலையை நன்குணரலாம்.

இத்தகைய சான்றுகள் எல்லாவற்றையும் துணையாகக் கொண்டு 'காவிரிப்பூம்பட்டினம்' என்ற ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதித்தர வேண்டும் என்று மேலப்பெரும் பள்ளம் மாதவி மன்றச் செயலாளரும், அருங்கலைகளிலும் வரலாற்றாராய்ச்சியிலும் பெரிதும் ஆர்வமுடையவரும், சிறந்த பண்புடையவரும் ஆகிய அன்பர் திரு.என். தியாகராசன் அவர்கள் சில தினங்களுக்கு முன் கேட்டுக் கொண்டனர்; அன்றியும் அடிக்கடி வந்து தம் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் புலப்படுத்திக்கொண்டும் இருந்தனர்.