உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1

சொல்லின் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலண்டன் மாநகரம் எப்படி விளங்கியதோ அதைவிட ஆயிரம் மடங்கு சிறப்பாகப் பூம்புகார் நகரம் விளங்கியதாக நாம் கூறலாம். பண்டைக் காலத்தில் சீரும் சிறப்பும் பெற்று விளங்கிய இந்நகரத்தின் பரப்பினையும் செல்வ வளத்தினையும் பிற சிறப்புக்களையும் பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய பண்டைத் தமிழிலக்கியங்களால் நன்குணரலாம்.கி.பி. முதல் நூற்றாண்டில் மேனாட்டினின்றும் தமிழ் நாட்டிற்கு வந்த யவன ஆசிரியராகிய தாலமி என்பவர் எழுதிய வரலாற்றுக் குறிப்பிலும்' அக்காலத்திலே மேனாட்டு வரலாற்று ஆசிரியர் ஒருவரால் எழுதப் பட்ட “பெரிப்ளூஸ்” என்ற நூலிலும்* காவிரிப்பூம் பட்டின மாகிய இந்நகரத்தைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.

கரிகாலன் அமைத்த மண்டபம்

உரையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆட்சி புரிந்த கரிகால்வளவன், தனது நாட்டில் உணவுப் பொருளை நிறைய விளைவிக்க வேண்டும் என்ற நன்னோக்கத் தால் காவிரியாற்றிற்குப் பெரிய கரையினை அமைத்தான். தனது நாடு வாணிகத் துறையிலும் வளம் பெறுதல் வேண்டும் என்ற பெருவேட்கையால் காவிரி கடலோடு கலக்குமிடத்தில் இயற்கைத் துறைமுகமாகவுள்ள இக் காவிரிப்பூம்பட்டினத்தைத் தான் அரசு வீற்றிருத்தற்குரிய தலைமை நகரங்களுள் ஒன்றாக அமைத்துக் கொண்டான். இவ்வேந்தர் பெருமான் இமயம்வரை படை யெடுத்துச் சென்று பகைவர்களை வென்று இமயமலை முகட்டில் தன் அரசியல் அடையாளமாகிய புலி இலச்சினையைப் பொறித்துத் திரும்பியபோது, பகையும் நட்பும் இல்லாத அயலா னாகிய வச்சிரநாட்டு மன்னன் தன்பால் உள்ள முத்துப்பந்தரைக் கப்பமாகக் கொடுத்தான். பகைமேற்கொண்டு வாட்போரில் எதிர்த்த மகதநாட்டு மன்னன் தோல்வியுற்றுத் தன்பால் உள்ள அழகிய பட்டிமண்டபத்தைத் திறையாகக் கொடுத்தான். முன்னமே நட்பினனாகிய அவந்தி வேந்தன் தன்னிடம் உள்ள தோரணவாயிலை உவப்புடன் கொடுத்தான். பொன்னினாலும்

1. Annual Report on South Indian Epigraphy for 1918-19, part II, para 2. 2. Foreign Notices of South India, p. 59.