உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




146

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

யால் அக்கடற் கரையிலுள்ள குறைப்பகுதியே இன்று நெய்த வாசல் எனப் பெயரளவில் ஓரூராக வழங்குகிறது. இப்பொழுது நெய்தவாசலுக்கும் காவிரிப்பூம்பட்டினத்திற்கும் நடுவே கீழ்த் திசையில் ஏழுமைல் அளவில் அமைந்த கடற்பகுதியை அங்கு வாழும் பரதவர்கள் "கரையப்பார்” எனக் கூறுகின்றனர். இப்பகுதியில் தான் முற்காலத்தில் கடல் கொண்ட புகார் நகரத்தின் கிழக்குப் பகுதியிலிருந்த கட்டிடங்களும் காமவேள் கோட்டம் முதலிய கோயில்களும் இருந்தன என்பதற்குரிய அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன. இக்கடற் கரைப்பகுதியிற் படகிற்சென்று மீன் பிடிக்கும்போது முற்காலத்தி லிருந்த கோயில் முதலிய கட்டிடப் பகுதிகளுட் சில இன்னும் தட்டுப்படுகின்றன என இங்குள்ள பரதவர்கள் தெளிவாகக் கூறுகின்றார்கள். கடலிடையேயுள்ள இப்பகுதியில் சிலவாண்டுகளுக்கு முன் பரதவர்கள் மீன் பிடித்தபோது, வெண்கலத்தாலமைந்த கலியாணசுந்தரர் திருவுருவமும் கருங்கல்லிற் செதுக்கப்பட்ட அழகம்மையின் திருவுருவமும் மீன் பிடிக்கும் வலையிற் சிக்கிய நிலையில் அத்திருவுருவங்கள் அவர்களால் மூழ்கி யெடுக்கப் பெற்றன. அத்திருவுருவங்கள் அன்னப்பன்பேட்டையென வழங்கும் கலிக்காமூர்த் திருக்கோயிலில் வைக்கப்பெற்றுள்ளமை காணலாம். திருச்சாய்க் காட்டுத் திருக்கோயிலிலுள்ள வில்லேந்திய முருகன் திருவுருவமும் இவ்வாறே சில ஆண்டுகளுக்கு முன் புகார்த் துறைமுகத்தே கடலிலிருந்து கிடைத்ததேயாகும். நிலமகழ்ந்த போது அதனிடைக் கிடைக்கப்பெற்ற திருவுருவங்களும் சிலவுண்டு. திருவெண்காடு என்ற ஊரின் கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட 5 திருவுருவங்கள் இப்பொழுது தஞ்சைக் கலைக் கூடத்திற் பார்ப்பவர் மகிழ வைக்கப்பெற்றிருப்பதைக் காணலாம். உறைக் கிணறுகளும், பெரும் பெரும் கிணறுகளும், நிலத்தினின்றும் தோண்டி எடுக்கப்பெறுவன கணக்கிலடங்கா. முதுமக்கள் தாழிகள் பலவும் இங்கு கிடைக்கின்றன. பழைய பொற்காசுகளும் கிடைக்கின்றன.

ஆராய்ச்சிக்குரிய பகுதி

கரையப்பார் என்ற இவ்விடத்தில் மீன் பிடிக்கும் உரிமை மேற்குறித்த கலிக்காமூர்த் திருக்கோயிலுக்குரியதாகும்.