உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

153

நிற்கும் கோயிலின் முன்னர் அட்டமங்கலத்தொடு ஐராவதம் எழுதிய கொடியை யேற்றுவித்து ஐம்பெருங் குழுவும் எண்பேராயமும் சூழ்ந்துவரச் சங்கமத்துறையிற் குளிர்ந்த தீர்த்தநீரை ஆயிரத்தெட்டு அரசர்களது முடிபொறிக்கப்பட்ட பொற்குடத்திற் கொணர்ந்து விண்ணவர் தலைவனாகிய இந்திரனை நீராட்டி விழாக் கொண்டாடினரென்றும் சிலப்பதி காரம் கூறும். தங்கள் நாட்டை ஆட்சி புரியும் சோழ மன்னர் மேன்மேலும் வெற்றியுடன் விளங்குதல் வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் இப்புகார் நகரமக்களால் அக்காலத்திற் கொண்டாடப்பெற்ற இந்திர விழா, ஒவ்வோராண்டிலும் சித்திரைத்திங்களில் சித்திரை விண்மீனும் பூரணையும் கூடிய நாளிற் கொடி யேற்றி இருபத்தெட்டுநாள் விழா நடந்து கொடியிறக்கி வைகாசி மாதம் அனுட நாளில் கடலாடலாகிய தீர்த்தத்துடன் நிறைவுபெறும் என்பதும், ஆடல்பாடல் ஆகிய பல்வகைக் கலைத் திறங்களுடன் ஆண்டுதோறும் இப்புகார் நகரத்தில் நிகழும் இந்திரவிழாவைக் கண்டு மகிழ நாவலந் தீவிலுள்ளார் பலரும் வருவார் என்பதும் சிலப்பதிகாரத்திலும் அதன் உரையிலும் விரிவாகக் கூறப்பட்டிருத்தல் காணலாம்.

புறம்பணையான் என்பது மாசாத்தனாராகிய ஐயனார்க் குரிய பெயராகும். ஒவ்வொரு நகரத்தின் எல்லையிலும் இருந்து அவ்வந்நகரங்களைக் காவல் புரியும் எல்லைத் தெய்வங்களுள் ஐயனாரும் ஒருவர். அவர்க்குரிய திருக்கோயில் காவிரிப்பூம் பட்டினமாகிய இந்த நகரத்தின் புற எல்லையில் அமைந்திருந்த தாகத் தெரிகிறது. இந்த ஐயனாரே கண்ணகியின் தோழியாகிய தேவந்தியை மணந்து தன் மூவா இளநலங்காட்டி மறைந்தார் என இளங்கோவடிகள் கூறுவர். நிக்கந்தக்கோட்டம் என்றது நிக்கந்தத் தேவரான அருகக் கடவுள் எழுந்தருளிய கோயிலாகும். உலக உயிர்களுக்கு வெப்பமும் தட்பமுமாகிய ஒளி வழங்கி உய்விக்கும் ஆற்றல் வாய்ந்த சூரியனையும், சந்திரனையும் தெய்வமாக வைத்துப் போற்றும் முறை நம்நாட்டில் தொன்று தொட்டு வரும் மரபென்பது, “திங்களைப் போற்றுதும்” எனவும் “ஞாயிறு போற்றுதும்” எனவும் இளங்கோவடிகள் தாம் இயற்றிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகார நூன்முகத்தே பரவிப் போற்றுதலால் நன்கு புலனாகும்.