உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




154

தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1

கோவலன் சென்ற வழி

கடற்கரைச் சோலையிலே தன் காதற்கிழத்தி மாதவி பாடிய கானல்வரிப் பாடலை ஊழ்வினை வயத்தால் மாறுபட்ட பொருளுடையதாக எண்ணி அவளை வெறுத்துப் பிரிந்த கோவலன், தன் வாழ்க்கைத் துணைவியாகிய கண்ணகியை அடைந்து தன் துயர் நிலையைப் புலப்படுத்திய பொழுது, கற்புடைச் செல்வியாகிய கண்ணகி, “என் காற்சிலம்புள்ளன அவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்” என அவனிடம் கொடுக்க, அதனைப் பெற்ற கோவலன், இச்சிலம்பினை முதற்பொருளாகக் கொண்டு வேற்று நாட்டிற் சென்று பெரும் பொருள் ஈட்டுதல்

வேண்டும் என்ற ஊக்கத்துடன் கண்ணகியையும்

உடனழைத்துக் கொண்டு தன் சுற்றத்தாரெவருக்கும் தெரியாத நிலையில் மதுரைக்குச் செல்ல வைகறைப் பொழுதிலேயே தன் வீட்டைவிட்டுப் புறப்பட்டான்; அங்ஙனம் புறப்பட்டவன், அரவணைமீது அறிதுயில் கொள்ளும் மணிவண்ணனாகிய திருமால் எழுந்தருளிய திருக்கோயிலை வலஞ்செய்து, அதனை டுத்து ஏழரங்குகளாக இந்திரனால் நிருமிக்கப் பெற்ற பௌத்தப் பள்ளியாகிய இந்திர விகாரங்கள் ஏழினையும் முறையே கண்டான்; புலவூண் துறந்து அறநூல் முதலியவற்றை நன்குணர்ந்து ஐம்புலனடக்கிய அறவோர் குழுமிய ஐவகையாக அமைந்த அருகத்தானமாகிய ஐஞ்சந்தியின் நடுவேயமைந்த மன்றத்திலே அசோக மர நிழலில் நல்லறங்களைக் கூறுதற் கெனச் சமணரில் இல்லறத்தாராகிய சாவகர்களால் அமைக்கப் பட்டிருந்த ஒளி வளர் கற்பீடத்தைத் தொழுது வலங் கொண்டான்; ஊர் வாயிலைக் கடந்து, வேந்தனும், அவன் சுற்றத்தாரும் வேனிற் காலத்தில் தங்கியிருத்தற்குரிய இளமரச் சோலையாகிய இலவந்தி கையைச் சூழ்ந்த மதிலோரமாக அமைந்த வழியே சென்றான்; காவிரித்துறையில் நீராடச் செல்வோர் தடையின்றி நேரே செல்லுதற்கென அமைந்த திருமஞ்சனப் பெருவழியைக் கடந்து, மேற்றிசை நோக்கித் திரும்பிக் காவிரியின் வடகரை யிலமைந்த பொழில் வழியாக நடந்தான்; இவ்வாறு ஒரு காததூரம் சென்ற பிறகு சமண்சமயத் தவமுது மகளாகிய கவுந்தியடிகள் தங்கியிருந்த தவப் பள்ளியை அடைந்தான் என