உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

155

இளங்கோவடிகள் தெளிவாகக் குறித்துள்ளார். இக்குறிப்புக்களைக் கூர்ந்து நோக்கினால் சோழ நாட்டின் துறைமுகப் பட்டினமாகிய இந்நகரத்திலிருந்து உள் நாட்டிற்குச் செல்லும் வழியில் எதிர்ப் படும் இந்நகரத்தின் தோற்றம் நன்கு புலனாதல் காணலாம்.

ஐந்து வகை வனங்கள்

இந்நகரத்தையொட்டி முற்கூறிய இலவந்திகைச்சோலை, உய்யானம், கவேரவனம், சம்பாதி வனம், உவவனம் எனும் ஐந்து வனங்கள் இருந்தன. அவற்றுள் இலவந்திகை என்பது, வேந்தன் தன் பரிவாரங்களுடன் வேனிற் காலத்தில் தங்கியிருத்தற்கேற்ற வண்ணம் குளிர்ந்த நிழலும் நீர் நிலையும் கொண்டு சுற்றிலும் மதிலாற் சூழப்பெற்றுள்ள காவற்சோலையாகும். உய்யானம் என்பது தெய்வ வழிபாட்டிற்குரிய நறுமலர்களைத் தரும் நந்தவனமாகும். கவேரவனம் என்பது, காவிரியின் தந்தையாகிய கவேரன் தவம் புரிந்த இடமாகும். சம்பாதிவனம் என்பது, சூரிய கிரணத்தாற் சிறையிழந்த கழுகரசனாகிய சம்பாதி தவம் புரிந்த வனமாகும். உவவனம் என்பது, புத்த தேவரது பாதபீடிகையைத் தன்பாள் கொண்ட பளிங்கு மண்டபத்தை அகத்தேகொண்டு பல வகை நறுமலர்களைத் தரும் மரங்களுடன் திகழும் மலர் வனமாகும். இவ்வனத்தின் மேற்குத்திசையில் அமைந்த சிறிய வாயில் வழியே சென்றால் இப்புகார் நகரத்தின் ஈமப்புறங் காடாகிய சக்கரவாளக் கோட்டத்தை யடையலாமென்றும், மேற்குறித்த உவவனத்திற்கும் சக்கரவாளக்கோட்டத்திற்கும் இடையே "உலக அறவி” என்னும் பொது அம்பலம் அமைந் திருந்ததென்றும், அதன்கண் இந்நகரத் தெய்வமாகிய சம்பாபதி கோயிலும் இவ்வம்பலத்திலுள்ள தூணொன்றிற் கந்திற்பாவை என்ற தெய்வத்தின் உருவமும் இருந்தன என்றும் சீத்தலைச் சாத்தனார் ‘மணிமேகலை' யிற் குறித்துள்ளார்.

இக்காலத்தில் வைத்தீசுவரன் கோயில் என வழங்கும் புள்ளிருக்குவேளூரில் முற்காலத்தில் சம்பாதி, சடாயு என்னும் கழுகரசர் இருவர் சிவபெருமானை வழிபட்டிருந்தனர். இவ்விருவருள் சம்பாதி என்பார் நாள்தோறும் இத்தலத்துக்கு ஒரு யோசனை (சுமார் ஒன்பது மைல்) அளவு சென்று