உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

கைககொள் பாசத்துக் கைப்படு வோரெனக் காதம் நான்கும் கடுங்குர லெடுப்பிப் பூதம் பூடைத்துண்ணும் பூதசதுக்கமும்"

என்பர் இளங்கோவடிகள்.

159

(சிலப், 5. 128-134)

அரசனுடைய செங்கோன்முறையாகிய நீதி சிறிது பிறழ்ந் தாலும், அறங்கூறும் அவையத்தாராகிய சான்றோர் நடுவுநிலை திறம்பினாலும், அன்னோரது குற்றத்தை நாவாற் கூறாது தன் கண்களில் கண்ணீர் மல்கி வழிய அழுங் குறிப்பினால் நகர மாந்தர்க்குப் புலப்படுத்தவல்ல தெய்வத்தன்மை வாய்ந்த பதுமையின் உருவம் அமைந்த அம்பலம் பாவை மன்றம் எனப்படும்.

66

அரைசுகோல் கோடினும் அறங்கூ றவையத்து

உரைநூல் கோடி ஒருதிறம் பற்றினும்

நாவொடு நவிலாது நவைநீர் உகுத்துப்

பாவைநின் றழூஉம் பாவை மன்றமும்"

என்பது சிலப்பதிகாரம்.

(சிலப், 5. 135-138)

இவ்வாறு உண்மையுணர்ந்த பெருமக்களாற் போற்றத் தக்க தெய்வத்தன்மை வாய்ந்த ஐந்து மன்றங்கள் இந்நகரத்திலே இருந்தனவாக இளங்கோவடிகள் கூறியவற்றைக் கூர்ந்து நோக்குங்கால், அவ்வடிகள் காலத்தில் இந்நகரத்தே வாழ்ந்த பெருமக்கள் அரச நீதிக்கு அடங்கி அறநெறியிலும் பொருள் வளத்திலும் குறைபாடின்றி வானுலக வாழ்வினை யொத்த இன்ப வாழ்க்கையில் திளைத்திருந்தார்கள் என்ற உண்மை நன்கு புலனாதல் காணலாம்.

கடல் வாணிகச் சிறப்பு

காவிரிப்பூம்பட்டினமாகிய இவ்வூர் முற்காலத்தில் கடல் வழியே வரும் மரக்கலங்கள் கரையளவும் வந்து பண்டங்களை யேற்றிச் செல்லுதற்கேற்ற இயற்கைத் துறைமுகமாக விளங்கியது.