உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

163

கண்ணியார், அவ்வேந்தர் பெருமானது வீரத்தினைப் புகழ்ந்து போற்றிய வெண்ணிக்குயத்தியார், கருங்குளவாதனார் என்ற புலவர் பெருமக்களும், அம்மன்னன் அரசு வீற்றிருந்த இப்புகார் நகரத்தில் தங்கியிருந்து தமிழ் வளர்த்த சான்றோர் எனக் கொள்ளுதல் பொருந்தும்.

கற்புடைமகளிர்

கற்பினின்றும் வழுவாமல் தன்னைக் காத்துத் தன் கணவனை உணவு முதலியவற்றால் பேணி, தம் இருவர் வாழ்விலும் நற்புகழ் பெருக நற்குண நற்செய்கைகளில் உறுதியுடையவளாய் நடப்பவளே பெண் என்றும், தனக்குத் தெய்வமாவான் தன் கணவனே என எண்ணி வைகறையில் துயிலெழும் பொழுதே அவனைத் தொழுதுகொண்டு எழுமியல் புடைய பெண், உலக நன்மை கருதி மேகத்தை நோக்கி "மழை பெய்க" என்று சொன்ன அளவில் அது பொழியும் என்றும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் கற்புடைப் பெண்டிரது சிறப்பைப் புலப்படுத்தி யுள்ளார். இவ்வாறு தன் கற்பின் திறத்தால் தெய்வத்தையும் ஏவல்கொள்ளவல்ல பத்தினிப் பெண்டிர் வாழும் நாடு பருவகாலந் தோறும் மழையினைப் பெற்றுக் குறையாத விளைவையுடைய தாய்த் தன்னை ஆளும் வேந்தர்க்கு மென்மேலும் வெற்றியைத் தந்து விளங்கும் என்பர் பெரியோர்.

தமிழின் தவக்கொழுந்து கண்ணகி

இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன் இப்புகார் நகரத்திலே வாழ்ந்த மாநாய்கன் என்னும் பெருங்குடி வணிகனுக்கு மகளாய்த் தோன்றி, மாசாத்துவான் மகன் கோவலன் என்பானுக்கு வாழ்க்கைத் துணைவியாய் அமைந்த கண்ணகி என்னும் கற்புடை நங்கை, தன் துயர் காணாது கணவனோடு மதுரைக்குச் சென்ற நிலையில், அங்கே தனது காற்சிலம்பினை விற்கச் சென்ற தன் கணவன் வஞ்சனையால் கொல்லப்பட்டது கேட்டுச் சீறியெழுந்து பாண்டியனது பேரவையில் தன் கணவன் கள்வனல்லன் என மெய்பித்ததும், தன் கற்பின் திறத்தால் மதுரை மூதூரைத் தீக்கிரை யாக்கியதும், பின்னர் சேரநாடடைந்து வேங்கை மர நீழலில் இருந்தபொழுது தன் கணவ

னாடு