உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1

170

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள்-1

புகாரிலமைந்த பௌத்தப்பள்ளி

(கி.பி. 4-ஆம் நூற்றாண்டு)

கி.பி. நான்காம் நூற்றாண்டில் சோழநாட்டுத் தலை நகராகிய உறையூரிற் பிறந்து வளர்ந்த புத்ததத்தன் என்பான், இருமுறை இலங்கைக்குச் சென்று பௌத்த சமய நூல்களை நன்கு பயின்று பின்னர்ச் சோழ நாட்டிற்குத் திரும்பி வந்து அபிதம்மாவதாரம், விநயவிநிச்சயம் என்ற இரு நூல்களையும் பாலி மொழியில் எழுதி வெளியிட்டனன். அவற்றுள் அபிதம்மா வதாரம் என்ற நூலை அரண்மனைகளும் பூஞ்சோலைகளும் செல்வம் நிறைந்த வணிகர்களும் உள்ள காவிரிப்பூம் பட்டினத்தில் கணதாசனால் அமைக்கப்பட்டிருந்த பௌத்தப் பள்ளியில் தான் தங்கியிருந்த பொழுது சுமதியென்ற மாணவன் வேண்டிக் கொண்டவாறு எழுதி முடித்த செய்தியை அந்நூலின் இறுதியிற் புத்ததத்தன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்குறிப்பினைக் கூர்ந்து நோக்குங்கால் காவிரிப் பூம்பட்டின மாகிய இம்மூதூர் கி.பி. நான்காம் நூற்றாண்டில் வளமார்ந்த சோலைகளையும் சிறந்த அரண்மனைகளையும் செல்வப் பெருக்க முடைய வணிகர் குழுவினையும் புத்தவிகாரம் முதலிய சமய நிலையங்களையும் தன்பாற்கொண்ட திருவுடை நகர மாகத் திகழ்ந்த செய்தி நன்கு புலனாம்.

தேவார ஆசிரியர்கள்

(கி.பி. 7-ஆம் நூற்றாண்டு)

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் செந்தமிழும் சிவநெறியும் வளரத் திருவவதாரஞ் செய்தருளிய அருளாசிரியர்களாகிய திருஞான சம்பந்தப் பிள்ளையாரும் திருநாவுக்கரசடிகளாரும் இப்புகார் நகரப் பகுதியில் அமைந்த பல்லவனீச்சரம், திருச்சாய்க்காடு, திருவலம்புரம், திருக்கலிக்காமூர் முதலிய திருக்கோயில்களை யிறைஞ்சித் தேவாரத் திருப்பதிகங்களாகிய பாமாலை களைப் பாடிப் போற்றியுள்ளார்கள்.

1. தமிழிலக்கிய வரலாறு. இருண்டகாலம். பக். 20.21