உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




198

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1

ஆகவே, கோயிலின் பரப்பு எறத்தாழ 79,566 சதுர அடிகள் உடையது எனலாம். கோயிலில் இரண்டு பிராகாரங்கள் உள்ளன. முதற்பிராகாரம் திருச்சுற்று மாளிகையுடன் அமைந்தது. முதற்பிராகாரத்தின் திருவாயிலைத் திருமாளிகைத் திருவாயில் என்று பெரியோர் வழங்குவர். இதில் மூன்று நிலைக்கோபுரம் ஒன்று இருத்தல் காணலாம். இரண்டாம் பிராகாரத்தில் திருவாயிலைத் திருத்தோரணவாயில் என்று கூறுவது வழக்கம். இதில் முடிவு பெறாத இரு நிலையுடனுள்ள ஒரு கோபுரம் உளது.

இக்கோயிலிலுள்ள மண்டபம் ஒன்று செம்பியன் மாதேவியார் பெருமண்டபம் என்ற பெயருடையது என்பதும் அதில் கிராம சபையார் கூட்டம் நடத்திவந்தனர் என்பதும் அறியத்தக்கனவாகும்.

மூர்த்திகள் :

திருக்கோயிலில் மூலத்தானத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் கயிலாச நாதசுவாமி என்று இந்நாளில் கூறப் பெறுவர். கோயிலிலுள்ள கல்வெட்டுக்களில் அப்பெருமான் ஸ்ரீ கயிலாசமுடைய மகாதேவர் என்று குறிக்கப்பட்டுள்ளனர். முதற்பிராகாரத்தில் சோமாஸ்கந்தர், நடராசர், தட்சிணா மூர்த்தி, சண்டேசுவரர், விசுவநாதர், சூரியன், வயிரவர் ஆகிய மூர்த்திகளுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் கோயில்கள் இருக்கின்றன. இரண்டாம் பிராகாரத்தில் கிழக்கு நோக்கிய திருவாயிலுடன் அம்பிகையின் கோயில் உள்ளது. அதற்குத் தனிப் பிராகாரமும் இருக்கின்றது. அம்பிகையின் திருப்பெயர் பிருகத்நாயகி (பெரிய நாயகி) என்று வழங்குகின்றது. இரண்டாம் பிராகாரத்தில் சுப்பிரமணியர்க்கு ஒரு கோயிலும் நந்திதேவர்க்கு ஒரு மண்டபமும் இருக்கின்றன.

தலவிருட்சமும் தீர்த்தமும்:

இத்தலத்திற்குரிய விருட்சம் அரசமரமாகும். சதுர்வேத புஷ்கரணி (நான்மறைக்குளம்) என்ற பெயருடைய திருக்குளம் இத்தலத்திற்குரிய தீர்த்தமாக உள்ளது.