உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செம்பியன் மாதேவித் தல வரலாறு

201

2

கல்வெட்டுக்களால் அறியப்படும்

செய்திகள்

க்கோயிலில் இருபத்து மூன்று கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றை அரசாங்கக் கல்வெட்டிலாகா அறிஞர்கள் படி எடுத்து, அவற்றின் சுருக்கத்தைத் தென்னிந்திய கல்வெட்டிலாகாவின் 1925-26-ஆம் ஆண்டறிக்கையில் வெளியிட்டிருக்கின்றனர். அக்கல் வெட்டுக்களின் துணைகொண்டு ஊர், கோயில் இவற்றின் பழைய வரலாற்றை ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம்.

1

சோழ மண்டலத்திலிருந்த ஒன்பது வளநாடுகளுள், ஒன்றாகிய அருமொழிதேவ வளநாட்டின் உள்நாடுகளுள் ஒன்றாகிய அளநாட்டில் உள்ளது செம்பியன் மகாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர். இவ்வூரைப் புதிதாகத் தம் பெயரால் அமைத்துச் சதுர்வேதிகளான அந்தணப் பெரு மக்களுக்குப் பிரமதேயமாக வழங்கியவர் செம்பியன்மகாதேவி என்ற அரசியார் ஆவார். இவ்வம்மையார், முதற்பராந்தக சோழரின் இரண்டாம் புதல்வரும், சோழ இராச்சியத்தில் சக்கர வர்த்தியாக வீற்றிருந்து கி.பி.950 முதல் 957 வயிைல் ஆட்சி புரிந்தவரும், தில்லைச்சிற்றம்பலவாணர் மீது திருவிசைப்பாப் பதிகம் ஒன்று பாடியவரும் ஆகிய கண்டராதித்த சோழரின் மனைவியார். இவ்வூரில் ‘ஸ்ரீ கயிலாசம்' என்ற பெயருடைய திருக்கோயிலைக் கட்டியவரும் இம்மகாதேவியாரேயாவர். இச்செய்திகள் கோயிலிலுள்ள கல்வெட்டுக்களால் நன்கு புலப்படுகின்றன. இவ்வரசியார்க்கு உத்தம சோழர் என்ற புதல்வர் ஒருவர் இருந்தனர். அவ்வேந்தர் பெருமான் கி.பி.970

1. ஒன்பது வளநாடுகள்: அருமொழிதேவ வளநாடு, க்ஷத்திரியசிகாமணி வளநாடு, உய்யக் கொண்டான் வளநாடு, நித்தவினோத வளநாடு, பாண்டிய குலா சனி வளநாடு, கேரளாந்தக வளநாடு, இராசாசிரய வளநாடு, இராசராச வளநாடு, இராசேந்திரசிங்க வளநாடு என்பனவாம்.