உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

5

பண்டோவென்ற ஒரேசாதி பெண்ணரசுக்கு உட்பட்டது. ஹெர்க்கிளிசுக்கு ஒரே பெண்ணிருந்தமையின் அவன் மிக்க அன்புடன் ஒரு பெரியநாட்டை. அவளுக்கு அளித்ததாகச் சொல்லுகிறார்கள். அவள் வழியினர் முந்நூறு ஊர்களை ஆட்சிபுரிந்தனர். அன்னோர் பெருஞ்சேனைகளை உடையவராயு மிருந்தனர்" என்பது. யவனாசிரியர் இருவரும் கூறியுள்ள கதை, பாண்டியர், மலையத்துவச பாண்டியனுடைய புதல்வியாகிய மீனாட்சியம்மையின் வழித் தோன்றியவராய்க் கௌரியர் என்றழைக்கப்பெற்ற செய்தியையாதல், அன்னோர் பாண்டியன் சித்திராங்கதனுடைய மகள் சித்திராங்கதையின் வழித் தோன்றல் களாயுள்ள செய்தியையாதல் குறித்ததாகக் கொள்ளல் வேண்டும். இதுகாறும் யாம் கூறியவாற்றால் பாண்டியர் மிக்க தொன்மை வாய்ந்தனரென்பது நன்கு விளங்குகின்றதன்றோ?

இனி, இப்பாண்டியர் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவ ரென்றும் வேப்பம்பூ மாலையைத் தமக்குரிய அடையாள மாலையாகவும் கயல்மீனுருவத்தைக் கொடியாகவும் இலச்சினையாகவும் கொண்டவர்கள் என்றும் பண்டைத் தமிழ் நூல்களும் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் கூறுகின்றன.

இனி, புறநானூறு, பத்துப்பாட்டு முதலிய சங்க நூல்களில் எத்துணையோ பல பாண்டிய மன்னர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. ஆயினும் அவர்களது வரலாறு நன்குணரப் படவில்லை. கடைச்சங்க காலத்திற்கு முந்திய நாட்களில் நிலவிய அரசர்களுள் வடிம்பலம்ப நின்ற பாண்டியனும், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியுமே சிறந்தோராவர்.