உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

7

இவ்வேந்தன் வடிம்பலம்பநின்ற பாண்டியனது வழியில் தோன்றியவன். இவனது இயற்பெயர் குடுமியென்பது. இவன் அரசர்க்குரிய பரிமேதம் முதலிய வேள்விகள் செய்து சிறப்புற்ற வனாதலின் இவனது இயற்பெயருக்கு முன்னர்ப் ‘பல்யாகசாலை’ என்ற அடைமொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பாண்டியருடைய முன்னோர்களிலொருவன் ஆயிரம் வேள்வி களியற்றிப் புகழ் பெற்றன னென்று சின்னமனூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன. இஃது இவ்வேந்தனையே குறிக்கின்றது போலும். இவனைக் 'கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குழாந் தவிர்த்த- பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியெனும் பாண்டியாதி ராசன்' என்று வேள்விக்குடிச் செப்பேடுகள் குறிப்பது ஈண்டு அறியத்தக்கது.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன் மீது அவனது அவைக்களப்புலவர் தலைவராகிய மாங்குடிமருதனாரால் பாடப் பெற்ற மதுரைக் காஞ்சியென்ற நூலிலுள்ள ‘பல்சாலை முதுகுடுமித் தொல்லாணை நல்லாசிரியர்- புணர் கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்' (759,61,62) என்ற அடிகளில் இவ்வேந்தன் புகழப்பட்டிருத்தல் காண்க. இதனால் சங்கச் செய்யுட்களிற் சொல்லப்பட்டுள்ள செய்திகள் பிற்காலத்துச் செப்பேடுகளாலும் கல்வெட்டுக்களாலும் உறுதியெய்துதல் நன்குணரத் தக்கது.

நம்முடைய முதுகுடுமியின் சிறப்பை விளக்கக் கூடிய ஐந்து பாடல்கள் புறநானூற்றிற் காணப்படுகின்றன. அவற்றைப் பாடினோர், காரிகிழார், நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார் என்ற புலவர்களேயாவர். அவர்களுடைய பாடல்களால் அறிந்து கோடற்குரியவை; இம்மன்னர் பெருமான் அக்காலத்தில் நிலவிய அரசர் பலரையும் புறங்கண்ட பெருவீரன்; வேண்டிய வேண்டியாங்குப் புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் ஈந்த பெருங் கொடைவள்ளல்; அரசர்க்குரிய பல வேள்விகளை முடித்துப் பெருமை யெய்தியவன்; சிவபெருமானிடத்தும் பெரியோர்களிடத்தும் பேரன்புடையோன்-என்பன. இவனை நெட்டிமையார் பாடிய பாடல்களுள் ஒன்றைக் கீழே தருகின்றோம்.