உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9

3. கடைச்சங்ககாலத்துப் பாண்டியர்கள்

பாண்டியரது தலைநகராகிய மதுரையில் விளங்கிய கடைச்சங்கம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் முடிவெய்தியது என்பது ஆராய்ச்சியாளரது கொள்கையாகும். ஆகவே, கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னர் ஆட்சி புரிந்த பாண்டிய அரசர்களது வரலாறே இப்பகுதியில் எழுதப் படுகின்றது. இறையனார் களவியற்கு உரைகண்ட தொல்லா சிரியர் கடைச் சங்கத்தைப் புரந்து வந்த பாண்டி மன்னர்கள் நாற்பத் தொன்பதின்மர் ஆவர் என்று அவ்வுரையிற் கூறியுள்ளார் சிலப்பதிகாரத்தின் உரைப்பாயிரத்திற்கு மேற் கோளாகக் காட்டப்பெற்ற 'வேங்கடங் குமரி தீம்புனற் பௌவம்' என்று தொடங்கும் ஆசிரியப்பாவும் அங்ஙனமே உணர்த்து கின்றது. எனவே, கடைச்சங்க நாட்களில் அரசு செலுத்திய பாண்டிய அரசர்கள் நாற்பத்தொன்பதின்மர் ஆவர் என்பது நன்கு புலப்படுகின்றது. அன்னோர் ஆட்சிபுரிந்த காலம் ஆயிரத்தொண்ணுற்றைம்பது ஆண்டுகள் என்பர் களவியலுரை கண்ட பெரியார். ஆகவே ஒவ்வொரு மன்னனது 'சராசரி' ஆட்சிக்காலம் சற்றேறக் குறைய முப்பத்தெட்டாண்டுகளாகும். கடைச் சங்ககாலத்துப் பாண்டியர் நாற்பத்தொன் பதின்மருள் சிலர் பெயர்களே நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு என்னும் நூல்களால் அறியப் படுகின்றன. அவர்களுள் பாண்டியன் முடத்திருமாறன் என்பவனே மிக்க பழைமை வாய்ந்தவன் என்பது களவிய லுரையால் பெறப்படுகின்றது. எனவே, அவன் வரலாற்றை முதலில் ஆராய்வோம்.

1. இறையனார் அகப்பொருள் உரை (சி. வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு) பக்கம் 5. 2. சிலப்பதிகாரம்-பக்கங்கள் 2,3.