உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 பாண்டியர்களது செங்கோற் பெருமையை அவளுக்குணர்த் துங்கால், இவன் செய்தியையும் எடுத்துரைத்துப் புகழ்ந் துள்ளது. அவ்வரலாறு அடியில் வருமாறு:

ஒரு நாள், கீரந்தை என்னும் வேதியனொருவன் தன் மனைவியை மன்றத்தின்கண் இருத்தி, அரசனது செங்கோல் அவளைக் காக்கும் என்று கூறிவிட்டு வெளியே சென்றனன். மற்றொருநாள், அவன் தன் இல்லாளுடன் மனையகத் திருக்குங் கால், பாண்டிய அரசன் ஒருவன் கதவைப்புடைத்தனன். உடனே அம்மறையோன் தன் மனைவிபால் ஐயமுற்று அவளை நோக்க, அதனை யுணர்ந்த அந்நங்கை 'முன்னொரு நாள் அரசனது செங்கோல் என்னைக் காக்கும் என்று கூறி, மன்றத்திருத்திச் சென்றீர்களே; இன்று அச்செங்கோல் காவாதோ?' என்றுரைத்தனள். அதனைப் புறத்தே கேட்டுக் கொண்டு நின்ற அரசன், தன் செய்கைக்குப் பெரிதும் வருந்தி, விரைவில் அரண்மனைக்குச் சென்று, அது தனக்குத் தகவன்று என்றெண்ணித் தன் செய்கைக்குத் தானே சான்றாகி, வாளால் தன் கையைக் குறைத்துக் கொண்டனன்; பிறகு, பொன்னாற் பொற்கை யமைத்துக்கொண்டு, பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்தான். இது பற்றியே, இவன் பொற்கைப் பாண்டியன் என்று வழங்கப் பெற்றான்.

இது சிலப்பதிகாரம், பழமொழியாகிய இரு நூல்களாலும் அறியப்படுவது. இஃது இப்பாண்டியன் கோல் கோடாது முறை செய்த மாட்சியை உணர்த்துகின்றது.

கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி

இவ்வேந்தன் கடைச்சங்க நாளில் விளங்கிய பாண்டியர் களுள் ஒருவனாவன். இளம்பருவத்திலேயே பேரறிவின இருந்தமை பற்றி இவன் 'இளம்பெருவழுதி' என்ற பெயர் பெற்றனன் போலும். 'கடலுண் மாய்ந்த' என்னும் அடை மொழிகளால் இவன் கடலிற் கலமிவர்ந்து சென்றபோது அங்கு மூழ்கியிறந்திருத்தல் வேண்டுமென்பது புலப்படுகின்றது. இவன் தண்டமிழ்ப் புலமையிற் சிறந்த பெருந்தகை மன்னனாவன். இவன் இயற்றிய இரண்டு பாடல்கள் பரிபாடலிலும் புறநானூற்றிலும் உள்ளன. (பரிபாடல் 15, புறநானூறு-182)