உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

19

என்னும் இளங்கோவடிகளது அருமைத் திருவாக்கினாலும், இவனது இயற்பெயருக்கு முன்னர் அமைந்துள்ள ‘ஆரியப்படை கடந்த' என்னும் அடைமொழிகளாலும் நன்கு வெளியாகின்றது.

இவன் கற்றோர்பால் மிக்க மதிப்புடையவன் என்பதும், கல்வி கற்றலையே பெரும்பயனாகக் கருதியவன் என்பதும் இவன் பாடியுள்ள 183ஆம் புறப்பாட்டினால் அறியப்படு கின்றன. அப்பாடல் அடியில் வருமாறு:-

உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போ ரன்ன உடன்வயிற் றுள்ளுஞ்

சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும்

ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

மூத்தோன் வருக வென்னா தவருள்

அறிவுடை யோனா றரசுஞ் செல்லும்

வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங்

கீழ்ப்பா லொருவன் கற்பின்

மேற்பா லொருவனும் அவன்கட் படுமே.

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்

ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் உயிர் துறந்த பின்னர், கொற்கைநகரத்தில் இளவரசராயிருந்து ஆட்சிபுரிந்து வந்த வெற்றிவேற்செழியன் என்பான் பாண்டியநாட்டை அரசாளும் உரிமையை எய்தினான். சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் படிமம் அமைத்தற்கு இமயத்தினின்றும் கல்கொணர வடநாட்டிற்குச் சென்றிருந்த போது இவ்வரசிளங் குமரனுக்கு மதுரைமாநகரில் முடிசூட்டுவிழா நடைபெற்றது.'

1. இதன் பொருள்: தம் ஆசிரியர்க்கு ஓர் ஊறுபாடுற்ற விடத்து அது தீர்த்தற்குவந்து உதவியும் மிக்க பொருளைக் கொடுத்தும் வழிபாட்டு நிலைமையை வெறாது கற்றல் ஒருவற்கு அழகிது; அதற்கு என்னோ காரணமெனின், பிறப்பு ஒரு தன்மையாகிய ஒரு வயிற்றுப் பிறந்தோருள்ளும் கல்வி விசேடத்தால் தாயும் மனம் வேறுபடும்; ஒரு குடியின்கட் பிறந்த பலருள்ளும் மூத்தோன் வருக வென்னாது அவருள் அறிவுடையோன் சென்ற நெறியே அரசனும் செல்லும்; வேறுபாடு தெரியப்பட்ட நாற்குலத்துள்ளும் கீழ்க்குலத்தில் ஒருவன் கற்பின் மேற்குலத்துளொருவனும் இவன் கீழ்க்குலத்தா னென்று பாராது கல்விப்பொருட்டு அவனிடத்தே சென்று வழி படுவனாதலால் - என்பது.

2. சிலப்பதிகாரம்-நீர்ப்படைக்காதை 127-138.