உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

29

களப்பாளராயர் எனவும் குடிப்பெயர் பெற்றுப் பெருமையோடு வாழ்ந்து வருவராயினர். எனவே, தமிழராகிய களப்பாளரும் ஏதிலாராகிய களப்பிரரும் ஒருவரேயாவரென்னும் முடிவு' எவ்வாற்றானும் ஒத்துக் கொள்ளத்தக்கதன்று. இதுகாறும் விளக்கியவாற்றால் களப்பிரர் தமிழர் அல்லர் என்பது தேற்றம்.

இனி, கி. பி. 6,7- ஆம் நூற்றாண்டுகளிலிருந்த பல்லவ மன்னர்களாகிய சிம்மவிஷ்ணு, முதல் நரசிம்மவர்மன் என்போரும்,கி. பி. 7, 8-ஆம் நூற்றாண்டுகளிலிருந்த மேலைச் சளுக்கிய வேந்தர்களாகிய முதல் விக்கிரமாதித்தன், விசாயதித்தன், இரண்டாம் விக்கிரமாதித்தன் என்போரும்3 களப்பிரரைப் போரிற் புறங்கண்டவர்கள் என்று கூறப் பட்டுள்ளனர். ஆகவே, கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே களப்பிரர் பல்லவரால் துன்புறுத்தப் பட்டு வலிகுன்றிய நிலையை எய்தினர் எனலாம். அந்நாட்களில், பாண்டி நாட்டின் ஒரு புறத்தில் வாழ்ந்து வந்தவனும், கடைச் சங்ககாலப் பாண்டியரின் வழித்தோன்றலுமாகிய பாண்டியன் கடுங்கோன் என்பான், பேராற்றல்படைத்த பெருவீரர்களுடன் வந்து, களப்பிர அரசனைப் போரில்வென்று தன் நாட்டைக் கைப்பற்றி மதுரையம்பதியில் வீற்றிருந்து அரசாளத் தொடங்கினான். இது வேள்விக்குடிச் செப்பேடுகளால் அறியப்படும் வரலாறாகும். இவ்வாறு பாண்டி வேந்தன் ஆட்சி, மதுரைமாநகரில் மீண்டும் நிறுவப்பெற்ற காலம் கி. பி. 575- ஆம் ஆண்டாதல் வேண்டும். அன்றேல், அதற்குச் சில ஆண்டுகட்கு முன்னரும் அந்நிகழ்ச்சி நடைபெற்றிருத்தல் கூடும். ஆகவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் பாண்டி நாட்டில் களப்பிர வேந்தர்களின் ஆட்சி நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது.

.

1. திரு ராவ்சாகிப் ஆ. இராகவையங்கார் அவர்கள் எழுதிய 'Epigraphy & Tamil Literature' என்ற ஆராய்ச்சி நூலில் கண்ட முடிவு. (The Pandiyan Kingdom by K.A. Nilakanta Sastrigal, M.A., page 49)

2. South Indian Inscriptions, Vol. 1, p. 152, Ibid, Vol.1l, p.356.

3. Indian Antiquary, Vol, V11, p.303; 1bid, Vol. IX p.129; Epigraphia Indica, Vol, V, p.204.