உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

33

சேந்தன்' எனவும் வேள்விக்குடிச் செப்பேடுகள் புகழ்கின்றன. இவனது ஆட்சியின் இறுதிக் காலத்தேதான் சீன தேயத்தின னாகிய ‘யுவான்சுவாங்' என்பான் பல்லவர்களது தலைநகராகிய காஞ்சிக்கு வந்தனன். இவன் அந்நகரிலிருந்து பாண்டி நாட்டிற்குச் செல்லப் புறப்படுங்கால், பாண்டிமன்னன் அப்போதுதான் இறந்தனன் என்றும், அந்நாட்டிற் பஞ்சம் மிகுந்திருந்தது என்றும் தனக்குக் காஞ்சியிலுள்ளவர்கள் அறிவித்த செய்திகளைத் தன் வரலாற்றுக் குறிப்பில் வரைந் துள்ளான். எனவே, கி. பி. 640-ஆம் ஆண்டில் இறந்ததாக இவனாற் குறிக்கப்பெற்ற பாண்டியன், இச்செழியன் சேந்தனே யாவன். இவனைப்பற்றிய பிற செய்திகளை யுணர்த்தும் ஆதாரங்கள் இக்காலத்துக் கிடைத்தில.

மாறவர்மன் அரிகேசரி

செழியன் சேந்தன் இறந்த பின்னர் அவனுடைய புதல்வ னாகிய அரிகேசரி என்பான் கி. பி. 640 -ஆம் ஆண்டிற் பட்டம் எய்தினன். இவன் மாறவர்மன் என்ற பட்டம் புனைந்தவன். இவனைச் சுந்தர பாண்டியன் எனவும், கூன் பாண்டியன் எனவும் திருவிளையாடற் புராணம் கூறாநிற்கும். இவன் முதலில் சமணமதப் பற்றுடையவனாயிருந்து அம்மதத்தைப் பெரிதும் ஆதரித்து வந்தான்; பிறகு சைவ சமய குரவருள் ஒருவராகிய திருஞான சம்பந்தமூர்த்திகளாற் சைவனாக்கப்பட்டான். இவன் முன்னிலையிற்றான் திருஞானசம்பந்தருக்கும் சமணமுனிவர் எண்ணாயிரவர்க்கும் அனல் வாதமும் வாதமும் புனல்வாதமும் நிகழ்ந்தன. இவனுடைய மனைவியார் மங்கையர்க்கரசி எனப்படுவர். இவ்வம்மையார் மணிமுடிச்சோழன் என்ற ஒரு சோழ மன்னன் புதல்வியார் என்று திருஞானசம்பந்தர் கூறியுள்ளார். இவர்கள் காலத்திற் பாண்டி நாட்டில் அமைச்சராயிருந்தவர் குலச் சிறையார் என்பவர். இவர்கள் மூவரும் சைவசமயத்திற் பெரிதும் ஈடுபாடுடையவர்களாக விளங்கியவர்கள். சிவபிரானிடத்துப் பேரன்பு பூண்டொழுகிய பாண்டியன் அரிகேசரி மங்கையர்க் கரசியார், குலச்சிறையார்

1. இவனது சிவபக்தி இறையனாரகப் பொருளுரையிலும் புகழப்பட்டுள்ளது. (மேற்கோட் பாடல்கள் 256,279)