உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

நாட்டில் நடைபெற்ற களப்பிரர் ஆட்சியைப் பற்றிய செய்தியும், கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் கி. பி. எட்டாம் நூற்றாண்டு முடிய அரசாண்ட பாண்டி மன்னர்களின் வரலாறுகளும் எவரும் தெரிந்துகொள்ள இயலாதவாறு மறைந்து போயிருக்கும் என்பது திண்ணம். எனவே, பாண்டியரது முதற் பேரரசின் வரலாற்றை அறிந்து கோடற்கு இச் செப்பேடுகளே உறுதுணையாயிருத்தல் உணரற்பாலதாம்.

இனி, இவற்றின் துணைக்கொண்டு இவ் வேந்தன் காலத்து நிகழ்ச்சிகளை ஆராய்வாம். இவன் நாற்பெரும் படையுடன் வந்தெதிர்த்த பல்லவ அரசனைக் காவிரியின் தென்கரையிலுள்ள பெண்ணாகடத்தில் நிகழ்ந்த போரில் புறங்காட்டியோடும்படி செய்தனன் என்றும், ஆய்வேளையும் குறும்பரையும் போரில் வென்றான் என்றும் வேள்விக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. அப்போர் நிகழ்ச்சிகள் இரண்டும் இவனது மூன்றாம் ஆட்சி யாண்டிற்கு முன்னர் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது அச்செப்பேடுகளால் அறியக் கிடக்கின்றது. ஆகவே, அவை கி.பி. 767-ஆம் ஆண்டிலாதல் அதற்கு முன்னராதல் நிகழ்ந் திருத்தல் வேண்டும். எனவே, பெண்ணாகடப் போரில் இவன்பால் தோல்வியுற்ற பல்லவ வேந்தன் நந்திவர்மப் பல்லவமல்லன் என்பது ஐயமின்றித் துணியப்படும். பெண்ணாகடம் என்பது தஞ்சாவூர்க் கூற்றத்திலுள்ளதோர் ஊர் என்று திருவிசலூர்க் கல்வெட்டொன்று உணர்த்துகின்றது. ஆகவே, அப்போர் தஞ்சாவூர்க் கண்மையிலுள்ள அவ்வூரில் நிகழ்ந்ததாதல் வேண்டும்.

இவ்வேந்தன் வென்றடக்கிய ஆய்வேள் என்பான், பொதியின் மலைத் தலைவனும், கடையெழு வள்ளல்களுள் ஒருவனுமாகிய வேள் ஆயின்வழியில் தோன்றி, கி. பி. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அம் மலையைச் சார்ந்து தென்கடற் பக்கத்திருந்த நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஒரு குறுநில மன்னன் ஆவன்.

1. Epigraphia Indica, Vol. XVII, No. 16.

2. Ins. 314 of 1907.