உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 வேண்டி, அதியமானுக்கு உதவிபுரிய வந்திருத்தல் கூடும். தம் படையுடன் வந்து பொருத அவ்விரு வேந்தரும் இப்பராந்தகன் பால் தோல்வியுற்றோடியிருத்தலும் இயல்பேயாம். இவனிடம் தன் நாட்டை இழந்த வேணாட்டரசன், வேள்விக்குடிச் செப்பேடுகளில் கூறப்பெற்ற ஆய்வேளாதல் வேண்டும். சேரனுக்குரிய அரணுடைப் பெருநகராய் மேலைக்கடற் கரையிலிருந்தது விழிஞமாகும். இவன் தென்றிசையில் தான் வென்ற நாடுகளைப் பாதுகாத்தற் பொருட்டும், அவற்றில் வாழ்ந்துகொண்டிருந்த குறுநில மன்னர்களைக் கண்காணித்தற் பொருட்டும், கரவந்தபுரம் என்ற நகரில் சிறந்த அகழும் மதிலுமுடைய ஒரு கோட்டை அமைத்து, அதில் பெரிய நிலைப்படையொன்று வைத்திருந்தனன். அவ்வூர் 'களக்குடி நாட்டுக் களக்குடியான கரவந்தபுரம்" என்று கல்வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளது. அஃது இந்நாளில் திருநெல்வேலித் தாலுகாவில் உக்கிரன் கோட்டை என்னும் பெயருடன் அழிந்த நிலையிலிருத்தல் அறியத்தக்கது.

2

பாண்டியர் எல்லோரும் சிவநெறியைக் கடைப்பிடித் தொழுகிய சைவர் ஆவர். இவ்வேந்தன் ஒருவனே வைணவ சமயப்பற்று மிக்குடையவனாயிருந்தனன். இவனைப் 'பரம வைஷ்ணவன் தானாகி நின்றிலங்கு. மணிநீண்முடி நிலமன்னவன்' என்று சீவரமங்கலச் செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன. அத்தகைய நிலையை இவன் அடைந்திருந்தமைக்குக் காரணம், இவன் ஆட்சிக் காலத்தில் வைணவ சமய குரவருள் ஒருவராகிய பெரியாழ்வார் பாண்டி நாட்டில் வாழ்ந்துகொண்டிருந் தமையேயாம். இவன் அவ் வாழ்வாரிடத்தில் பெரிதும் ஈடுபட்டு வைணவனாக மாறியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். ஆகவே, அப் பெரியார் இவனுக்கு ஞானகுரவராக இருந்திருத்தலும் கூடும். இவன், அதியமானது கொங்கு நாட்டைக் கைப்பற்றிய பிறகு அங்குள்ள காஞ்சி' வாய்ப் பேரூர்க்குச் சென்று, அவ்வூரில் திருமாலுக்குக் குன்ற மன்னதோர் 1. S.I.I., Vol. VII, 431.

2. Ep. Ind., Vol XXIII, No 45.

3. காஞ்சி என்ற ஆறு இக்காலத்தில் நொய்யல் என்று வழங்குகிறது. பேரூர் அவ்வாற்றின் கரையில் கோய முத்தூர்க்கு அண்மையில் உள்ளது.