உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

51

அதனால் நெடுஞ்சடையன் பராந்தகனையும் வரகுண பாண்டியனையும் ஒருவனெனக் கோடல் எவ்வாறு ஏற்புடைய தாகும்? பாட்டன் பெயரையே யன்றி முன்னோர்களின் பெயரையும் மக்கட்கு இட்டு வழங்குவது தொன்றுதொட்டு வரும் வழக்கமன்றோ? பேரன்மார் பலராயின் அவரெல்லார்க்கும் பாட்டன் பெயரிடுதல் வழக்கமுமன்று. ஆகவே, நெடுஞ்சடையன் பராந்தகனும் வரகுண மகாராசனும் ஒருவராகார் என்பதும் வெவ்வேறு வேந்தரேயாவர் என்பதும் முன்னவனுக்குப் பின்னவன் பேரன் ஆவன் என்பதும் அறியற் பாலனவாம்.

சீமாறன் சீவல்லபன்

முதல் வரகுணபாண்டியன் இறந்த பின்னர், அவன் மகனாகிய இம் மன்னன் கி. பி. 835-ஆம் ஆண்டில் முடி சூடி ஆட்சிபுரியத் தொடங்கினான். இவன் மாறவர்மன் என்னும் பட்டம் உடையனாவன். இவனுக்கு ஏகவீரன், பரசக்கர கோலாகலன், அவனிபசேகரன் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. புதுக்கோட்டை நாட்டிலுள்ள சிற்றண்ணல் வாயிலில் சமணரது குகைக்கோயிலில் காணப்படும் கல்வெட்டொன்று, 'பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல் - ஆர்கெழுவைவேல் அவனிபசேகரன் - சீர்கெழு செங்கோல் சீவல்லவன்' என்று இவனைப் புகழ்ந்து கூறுகின்றது. இவன் வரலாறு சின்னமனூர்ச் செப்பேடுகளாலும், தளவாய்புரச் செப்பேடுகளாலும் சில கல்வெட்டுக்களாலுமே அறியப்படுகின்றது.

1

இவ்வேந்தன், குண்ணூர், சிங்களம், விழிஞம் என்னும் இடங்களில் போர் நிகழ்த்தி வாகை சூடினன் என்றும் குடமூக்கில் வந்தெதிர்த்த கங்கர், பல்லவர், சோழர், காலிங்கர், மாகதர் ஆகிய அரசர்களை வென்று ஆற்றலோடு விளங்கினன் என்றும் சின்னமனூர்ச் செப்பேடுகள் உணர்த்துகின்றன. ஈண்டுக் குறிக்கப் பெற்ற இடங்களுள் விழிஞம் என்பது திருவனந்த புரத்திற்குத் தெற்கே பத்துமைல் தூரத்தில் மேலைக் கடற்கரையிலுள்ள ஒரு பட்டினமாகும். எனவே, விழிஞத்துப்

2

1. Ins. 368 of 1904; சாசனத் தமிழ்க்கவி சரிதம் பக். 32.

2. S. I. I., Vol. III. p. 13.