உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

57

தாலுகாவிலுள்ள எருக்கங்குடிக் குன்றில் காணப்படும் அகவல் நடையில் அமைந்த கல்வெட்டொன்றில் குறிக்கப்பட்டுள்ளன. இவன், பல நீர் நிலைகளால் வளம்படச் செய்த அந் நிலப்பரப்பு இருஞ்சோழநாடு என்னும் பெயருடையதாய்ச் சிறப்புற்றி ருந்தமை உணரற்பாலதாம்.

வரகுணவர்மன்

இவன் சீமாறன் சீவல்லபனுடைய முதல்மகன் ஆவன்; சடையவர்மன் என்னும் பட்டமுடையவன். இவனை இரண்டாம் வரகுணபாண்டியன் என்றும் கூறுவதுண்டு. வனது ஆட்சியின் எட்டாம் ஆண்டாகிய சகம் 792-ல் வரையப்பெற்ற கல்வெட்டொன்று' மதுரை ஜில்லாவிலுள்ள ஐவர்மலையில் உள்ளது. அக்கல்வெட்டு கி.பி. 870-ல் பொறிக்கப் பெற்றதாதல் வேண்டும். எனவே, இவ் வேந்தன் கி.பி.862-ஆம் ஆண்டில் முடிசூட்டப்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். இவனைக் 'குரைகழற்கா லரை சிறைஞ்சக் குவலயதலந் தனதாக்கின-வரைபுரையு மணிநெடுந்தோள் மன்னர்கோன் வரகுணவர்மன்' என்று சின்னமனூர்ச் செப்பேடுகள் புகழ்ந்து கூறுகின்றன. பாண்டியர்க்கும் பல்லவர்க்கும் நடை பெற்று வந்த போர்கள் இவன் ஆட்சிக்காலத்தில்தான் ஒருவாறு முடிவுற்றன எனலாம்.

தென்னார்க்காடு ஜில்லா திருவதிகை வீரட்டானத்தி லுள்ள நிருபதுங்கவர்மனது பதினெட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றால்' அப்பல்லவ வேந்தனும் இவ் வரகுண பாண்டியனும் நண்பர்களாயிருந்தனர் என்று தெரிகிறது. அப் பல்லவ மன்னன் இறந்த பின்னர், அவன் மகன் அபராஜித வர்மன் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த காலத்தில், நம் வரகுண வர்மனுக்குத் தன் தந்தை இழந்த சோழ நாட்டையும் தொண்டை நாட்டையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. அதற்கேற்ப அக்காலத்தில் சோழநாட்டில் ஒரு பகுதியை அரசாண்டு கொண்டிருந்த விசயாலய சோழனும்

1. Annual Report on South Indian Epigraphy for 1929-30, page 73,

2. Ins, 705 of 1905.

3. S. I. I., Vol. XII. No. 71.