உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பாண்டியர் வரலாறு

65

மன்னனை வைப்பூரிலும் நாவற்பதியிலும் தோல்வியுறச் செய்தமையும் அச்செப்பேடுகளால் நன்கு அறியக்கிடக்கின்றன. அவற்றுள் உலப்பிலி மங்கலத்தில் இவனை எதிர்த்துத் தோல்வி எய்தியவன் யாவன் என்பது இப்போது புலப்படவில்லை. இவனோடு போர் நிகழ்த்திப் புறங்காட்டி யோடிய கொடும் பாளூர் மன்னன், சோழ அரசர் குடும்பத்தோடு நெருங்கிய உறவினால் பிணிக்கப் பட்டிருந்த பூதிவிக்கிரம கேசரியா யிருத்தல் வேண்டும். வஞ்சி மாநகரில் இவனோடு பொருதவன் யாவன் என்பது தெரிய வில்லை. ஒருகால், இவனுடைய தாய்ப்பாட்டனாகிய சேர மன்னனது தலைநகராகிய

வஞ்சியின்மீது படையெடுத்துவந்த ஒரு பகைவனோடு இவன் போர்புரிந்து அவனை வென்றி ருத்தலும் கூடும். அப்போர் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் விளக்கக்கூடிய கருவிகள் இந்நாளில் கிடைத்தில.

இனி, சோழ மண்டலத்தில் கி. பி. 907-ல் முடிசூடிக் கொண்ட முதற்பராந்தக சோழன், அவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில், 'மதுரைகொண்ட கோப்பரகேசரி' என்று கல்வெட்டுக்களிற் குறிக்கப் பெற்றுள்ளான். இதனால் முதற் பராந்தக சோழன் கி. பி. 910-ல் இம்மூன்றாம் இராசசிம்ம பாண்டியனோடு போர் புரிந்து அவனை வென்றிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலப்படுகின்றது. தோல்வியுற்ற இராசசிம்மபாண்டியன் இலங்கை மன்னனாகிய ஐந்தாம் காசிபனைத் தனக்குத் துணைப்படை யனுப்புமாறு கேட்டுக் கொண்டனன். அவ் வேந்தனும் பாண்டியனது வேண்டுகோட் கிணங்கித் தன் படைத்தலைவன் சக்க சேனாதிபதியின் கீழ் சிறந்த யானைகளும், குதிரைகளும், வீரர்களும் அடங்கிய பெரும்படை யொன்றை அனுப்பினான். இலங்கைப் படையும் பாண்டிப் படையும் ஒருங்குசேர்ந்து முதற் பராந்தகசோழ னோடு போர் புரிவதற்குப் புறப்பட்டன. வெள்ளூர் என்னுமிடத்திற் பெரும்போர் நடைபெற்றது.' அவ்விருபடை களும் பராந்தகன் படையுடன் போர்புரியும் ஆற்றலின்றிப்

1. S. I. I., Vol. III, No. 99. Ins. 231 of 1926. இதில் குறிப்பிடப்பெற்ற வெள்ளூர் பாண்டி நாட்டின் வடவெல்லையிலாதல் சோழநாட்டின் தென்னெல்லையிலாதல் இருந்ததோர் ஊராதல் வேண்டும்.