உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

ம்

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2 புறங்காட்டியோடத் தலைப்பட்டன. இராசசிம்மன் இம் முறையும் தோல்வியுற்றான். எனவே, பாண்டிநாடு பராந்தக சோழனது ஆட்சிக்குள்ளாயிற்று. இது நிகழ்ந்தது கி. பி. 919- ஆம் ஆண்டாகும். இச்செய்திகளுள் சில, இரண்டாம் பிருதிவிபதியின் உதயேந்திரச் செப்பேட்டிலும் சொல்லப் பட்டன.1

சின்னமனூர்ச் செப்பேடுகள், இராசசிம்ம பாண்டியன் தஞ்சை வேந்தனை வைப்பூரிலும் நாவற்பதியிலும் போரில் வென்றானென்று கூறுவதால் இப்பாண்டியனுக்கும் முதற் பராந்தக சோழனுக்கும் அடிக்கடி போர்கள் நிகழ்ந்திருத்தல் வேண்டும் என்பதும் அவற்றுள் சிலவற்றில் பாண்டியனும் சிலவற்றில் சோழனும் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் என்பதும், இறுதியில் வெள்ளூரில் நிகழ்ந்த போரில் இராச சிம்மன் தோல்வியுற்றுப் பராந்தகன்பால் பாண்டி நாட்டை இழக்கும்படி நேர்ந்திருத்தல் வேண்டும் என்பதும் நன்கு தெளியப்படும்.

தனக்குரிய நாட்டை இழந்த இராசசிம்ம பாண்டியன் சிங்களத்திற்குச் சென்று அந்நாட்டரசனது உதவி பெறுமாறு அங்குத் தங்கியிருந்தனன்; தன் நாட்டைப் பெறுவதற்கு அவ்வேந்தன் உதவாமை கண்டு, அங்குத் தங்கியிருப்பதால் ஒரு பயனும் இல்லை யென்பதை நன்குணர்ந்து, தன் முன்னோர் களிடமிருந்து தனக்குக் கிடைத்துள்ள சுந்தரமுடியையும் பிற அரச சின்னங்களையும் அம் மன்னனிடத்தில் வைத்துவிட்டு, தன் தாய் வானவன் மாதேவியின் பிறந்தகமாகிய சேரநாட்டிற்குச் சென்று வசித்து வந்தான். பின்னர் இவனைப் பற்றிய செய்திகள் புலப்படவில்லை. ஆகவே, பாண்டியரது ஆட்சி இம்மன்னன் காலத்தேதான் மிகவும் தாழ்ந்த நிலையை யடை ந்து வீழ்ச்சி யெய்திற்று; பாண்டிநாடும் சோழரது ஆளுகைக் குள்ளாயிற்று. திருநெல்வேலி, மதுரை, இராமநாதபுரம் முதலான ஜில்லாக் களிலும் திருவாங்கூர் நாட்டின் சில பகுதிகளிலும் காணப்படும் முதற்பராந்தகசோழன் கல்வெட்டுக்கள் இவ்வுண்மைகளை நன்கு விளக்குங் கருவிகளாக உள்ளன.

1. S. I. I., Vol. II. No. 76 Verses 9-11.