உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




76

தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

அரிச்சந்திரபுரம் ஆரியப்படையூர், பம்பைப் படையூர், புதுப் படையூர், மணப்படையூர், கோணப்பெருமாள் கோயில், திருமேற்றளி, தாராசுரம், நாதன் கோயில் என்று வழங்கும் நந்திபுரவிண்ணகரம் ஆகிய ஊர்களையும் தன்னகத்துக் கொண்டு முற்காலத்தில் பெரிய நகரமாக அஃது அமைந்திருந்தது என்பதைத் தேவாரப்பதிகங்களாலும் அவ்விடங்களில் காணப்படும் கல்வெட்டுக்களாலும் அறியலாம். அன்றியும் சேக்கிழாரடிகள், 'தேரின் மேவிய செழு மணி வீதிகள் சிறந்து பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை" என்று அதனைப் பெரு நகராகவே கூறியிருப்பதும் அறியத்தக்கது. அம்மாநகர் வெவ்வேறு அரசர் காலங்களில் வெவ்வேறு பெயர்களை எய்தி மிகச் சிறப்புற்றிருந்தது என்பது வெறும் புனைந்துரையன்று. அது கி. பி. ஏழாம் நூற்றாண்டில் பழையாறை நகர் எனவும், எட்டாம் நூற்றாண்டில் நந்திபுரம் எனவும், ஒன்பது பத்தாம் நூற்றாண்டு களில் பழையாறை நந்திபுரம் எனவும், பதினொன்றாம் நூற்றாண்டில் முடிகொண்ட சோழபுரம் எனவும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் இராசராசபுரம் ராசராசபுரம் எனவும் வழங்கப்பெற்றது என்பதைப் பண்டைத் தமிழ் நூல்களும் கல்வெட்டுக்களும் நன்குணர்த்துகின்றன. அந்நகரில் அக்காலத்தில் சோழ மன்னர் களின் அரண்மனை அமைந்திருந்த இடம், இக்காலத்தில் சோழ மாளிகை என்னும் ஒரு தனியூராக உள்ளது. அவ்வரண்மனையைச் சுற்றிலும் முன்னிருந்த நான்கு படைவீடுகள் இப்போது நான்கு ஊர்களாக இருக்கின்றன. எனவே சோழர் காலங்களில் அது பெரிய நகரமாயிருந்ததோடு அவ்வேந்தருட் சிலர்க்கு இரண்டாவது தலைநகராக இருந்து புகழெய்தியது என்பதும் அறியற் பாலதாம்'.

1. பெரிய புராணம் - அமர்நீதிநாயனார் புராணம். பா. 1.

2. செந்தமிழ் 43 ஆம் தொகுதி 4.5 ஆம் பகுதிகளில் யான் எழுதியுள்ள பழையாறை நகர் என்னுங் கட்டுரையில் இம் மாநகரைப் பற்றிய செய்திகளை விளக்கமாகக் காணலாம்.