உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

81

திருவிசயமங்கை என்ற சிவன் கோயிலைக் கற்றளியாக எடுப்பித்து அதற்கு நிவந்தமாக நெடுவாயில் என்னும் ஊரையும் நூறுகழஞ்சு பொன்னையும் அளித்திருப்பது அவனது சிவ பக்தியின் மாண்பை இனிது புலப்படுத்தும்.

அவ்விக்கிரமசோழ மாராயன் முதல் இராசராச சோழன் ஆட்சிக்காலத்திலும் இராசராசப் பல்லவரையன் என்னும் பட்டம் பெற்று' உயர்நிலையில் இருந்துள்ளான் என்று தெரிகிறது. இனி, உத்தம சோழன், தன் அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாகிய அம்பலவன் பழுவூர் நக்கனுக்கு விக்கிரம சோழ மாராயன் என்னும் பட்டம் அளித்திருத்தலால் இவ்வேந்தனுக்கு விக்கிரமசோழன் என்ற மற்றொரு பெயரும் இருந்திருத்தல் வேண்டும். அன்றியும், இவனை மதுராந்தகன் என்றும் அக் காலத்தில் வழங்கியுள்ளனர் என்பது ‘ஸ்ரீமதுராந்தக தேவரான உத்தம சோழரைத் திருவயிறுவாய்த்த உடையபிராட்டியார்? என்னும் கல்வெட்டுப் பகுதியினால் நன்கறியக்கிடக்கின்றது.

நடுவில் புலியுருவம் பொறிக்கப்பெற்றதாயும் ஓரத்தில் உத்தமசோழன் என்று வடமொழியில் வரையப்பெற்ற தாயு மிருந்த ஒரு பொற்காசு' உத்தமசோழன் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பெற்று வழங்கி வந்தது என்று சர்வால்ட்டர் எலியட் என்னும் அறிஞர், 'தென்னிந்திய நாணயங்கள்' என்னும் தம் நூலில் கூறியுள்ளனர். இப்போது கிடைத்துள்ள சோழ மன்னர் நாணயங்களுள் அதுவே மிகப் பழமை வாய்ந்தது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து'.

நாட்டில் யாண்டும் அமைதி நிலவ, மக்கள் எல்லோரும் எத்தகைய துன்பங்களுமின்றி இனிது வாழ்ந்து வருமாறு செங்கோல் செலுத்திக்கொண்டிருந்த உத்தம சோழனும் கி. பி. 985 ஆம் ஆண்டில் இறந்தான். இவனுக்குப்பிறகு சுந்தரசோழன் புதல்வ னாகிய முதல் இராசராச சோழன் முடிசூட்டப் பெற்றனன்.

1. Ins. 160 and 163 of 1929.

2. S.I. I., Vol. III, No. 147.

3. Coins of Southern India by Sir Walter Elliot, p. 132.

4. The Colas, Vol. I, p 194.

p