உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 சிறையில் வைக்கப்பட்டிருந்த தன் தூதனையும் விடுவித்தான். இவன் தன் தூதனை அந்நகரில் சேரன் சிறையில் வைத்திருந்தமை பற்றியே இத்தகைய அழிவு வேலைகளைப் பெருங் கோபத்தினால் அங்குச் செய்துவிட்டான் என்பது வெளிப்படை. பிறகு தென் கடற் கோடியிலுள்ள விழிஞத்திலும் பெரும்போர் நடை பெற்றது. அப்போரிலும் சேரநாட்டு வீரர்கள் தோல்வியுற்றுப் புறங்காட்டியோடவே, இராசராசன் வெற்றியெய்தி அந்நாட்டைக் கைப்பற்றினான். சேர நாட்டுப் போர் நிகழ்ச்சிகளும் ஒருவாறு முடிவுற்றன. இவன் வெற்றித் திருவை மணந்து அந்நாட்டில் தங்கியிருந்த நாட்களில் இவன் பிறந்தநாள் விழாவும் வரநேர்ந்தது. ஆகவே, தான் பிறந்த சதய நாள் விழாவை அந்நாட்டில் மிகச் சிறப்பாக நடத்தினான். அன்றியும், ஆண்டு தோறும் அவ்விழா சேர நாட்டில் நடைபெறுமாறும் இவன் தக்க ஏற்பாடு செய்தான்'. பிறகு, இவ்வேந்தன் அந்நாட்டிலிருந்து சோணாட்டிற்குத் திரும்புங் கால் பொற்குவியலும் களிற்று நிரைகளும் மிகுதியாகக் கொணர்ந்தனன்'.

அப்போர் நிமித்தம் சேர நாட்டிற்குச் சென்றிருந்த படைத் தலைவர்களுள் ஒருவனான கம்பன் மணியன் ஆகிய விக்கிரம சிங்க மூவேந்த வேளான் என்பவன், அங்கிருந்து இராசராச சோழன் கொண்டுவந்த கடவுட் படிமங்கள் பலவற்றுள் மரகத தேவர் படிமத்தை அரசனிடம் பெற்று, அதனைத் திருப் பழனத் திலுள்ள சிவன் கோயிலில் எழுந்தருளிவித்தான் என்று அவ்வூர்க் கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. அக்கல்வெட்டில் சொல்லப் பட்ட கடவுட்படிமம் நவமணிகளுள் ஒன்றாகிய மரகதத்தால் செய்யப்பெற்றதாதல் வேண்டும். அதில் பொதுவாக மரகத தேவர் என்று குறிப்பிடப்பட்டிருத்தலாலும் இக்காலத்தில் அப்படிமம் அக்கோயிலில் காணப்படாமையாலும் அஃது எந்தக் கடவுளுடைய படிமம் என்பது புலப்படவில்லை.

இனி, திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இராசராச சோழனது போர்ச் செய்திகளைப் பற்றிக் கூறுஞ் செய்திகள் ஆராயற்பாலன. கலிங்கத்துப்பரணி, பாடல் 201.

1.

2. Ins. 443 of 1918.

3. Ins. 135 of 1928.