உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

இராசராச சோழன் தன் திக்குவிசயத்தில் முதலில் நிகழ்த்தியது பாண்டி நாட்டுப் போர் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உணர்த்தாநிற்க, இவன் கல்வெட்டுக்கள் காந்தளூர்ச் சாலையில் கலமறுத்த இவனது சேர நாட்டுப் போரையே முதலில் கூறுகின்றன. இராசராசன் நடத்திய சேர நாட்டுப் போர், பாண்டி நாட்டுப் போர் ஆகிய இரண்டினுள் எது முதலில் நடைபெற்றது என்பது பற்றிச் செப்பேடும் கல்வெட்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்தை உணர்த்துவனபோல் காணப்படினும் அவை உண்மையில் முரண்படக் கூறவில்லை. இராசராசன் தன் திக்கு விசயத்தைத் தொடங்குவதற்கு முன், தன் தூதனைச் சேரன் அவமதித்துச் சிறையிலிட்டமை பற்றிச் சேர நாட்டிற்குப் படையெடுத்துச் செல்வது இன்றியமையாததாயிற்று. ஆகவே சேர நாட்டில் காந்களுர்ச் சாலையில் கி.பி. 988-ல் நிகழ்ந்ததே இராசராச சோழனது முதற் போர் என்று கல்வெட்டுக்கள் உணர்த்தும் செய்தி உண்மையானதேயாம். திருவாலங்காட்டுச் செப்பேடு களை நுண்ணிதின் ஆராயுங்கால் அவை கூறுஞ் செய்தியிலும் தவறில்லை என்பது நன்கு புலனாகும். இராசராச சோழன் திக்குவிசயஞ் செய்யத் தொடங்கியபோது முதலில் தாக்கி வென்றது தென்றிசையிலுள்ள பாண்டி நாடே என்பதுதான் திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியக் கிடப்பது. எனவே, இராசராசனது திக்குவிசயச் சிறப்பைக் கூறத் தொடங்கிய திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அதற்கு முன்னர் இவன் ஆட்சியில் நிகழ்ந்த போர்ச் செயலைக் குறிப்பிடா மையால் முதலில் நடைபெற்ற காந்தளூர்ச்சாலைப் போர் அவற்றில் காணப்படவில்லை என்க.

இனி, இராசராச சோழன் தன் திக்குவிசயத்தில் பாண்டி நாட்டைக் கைப்பற்றிப் பிறகு கொல்லத்திற்குச் சென்று அங்குப் போர் புரிந்து அதனைக் கைக்கொள்வானாயினன். கொல்லம் என்பது இந்நாளில் கேரள இராச்சியத்திற்குள் அமைந்துள்ள சிறு நாடாகும். அது, முன்னர் இவ்வேந்தன் கைப்பற்றிய சேர நாட்டில் சேரன் ஆட்சியில் எஞ்சியிருந்த பகுதியாகும். அதனையும் அதனைச் சார்ந்த கொடுங்கோளூரையும் இவன்